'வீடியோ கால்' மூலம் கர்ப்பிணிக்கு சிகிச்சை; இரட்டை சிசுக்கள் உயிரிழப்பு..!
Pregnant woman treated through video call Twins die
செயற்கை முறையில் கருத்தரித்த பெண்ணுக்கு, 'வீடியோ' கால் மூலம் செவிலியர் உதவியுடன் டாக்டர் சிகிச்சை அளித்ததால், இரட்டை குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தெலுங்கானாவில் இடம்பெற்றுள்ளது.
தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டம், எலிமினேடு கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தி. திருமணமாகி, ஏழு ஆண்டுகளாக இவர் கருத்தரிக்கவில்லை. இதனால், ஐ.வி.எப்., எனப்படும் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை வாயிலாக ஐந்து மாதங்களுக்கு முன் கருவுற்றுள்ளார்.
கீர்த்தியை பரிசோதித்த டாக்டர்கள் அவரது வயிற்றில் இரட்டை சிசுக்கள் வளர்வதாக கூறியுள்ளனர். செயற்கை முறையில் கருத்தரிக்க செய்த டாக்டர் அனுஷா ரெட்டி என்பவரிடம், வழக்கமான பரிசோதனைக்கு கீர்த்தி கடந்த மாதம் வந்துள்ளார்.

பரிசோதனையின் போது கீர்த்தியின் கருப்பை வாய் தளர்ந்திருந்ததை டாக்டர் கண்டறிந்து, அங்கு தையல் போட்டு, ஓய்வில் இருக்கும்படி கூறி, கீர்த்தியை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்கு பின்னர், கடந்த 04-ஆம் தேதி கீர்த்திக்கு பிரசவ வலி வந்துள்ளது.
அப்போது கீர்த்தி டாக்டர் அனுஷாவின் மருத்துவமனைக்கு வந்த போது அங்கு டாக்டர் அங்கு இல்லை. அந்நிலையில், வீடியோ கால் மூலம் செவிலியருடன் தொலைபேசியில் பேசிய டாக்டர் அனுஷா, வலி நிவாரண ஊசி உட்பட சில சிகிச்சைகளை அளிக்க வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி கீர்த்தி வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்கள் உயிரிழந்த்துள்ளன. அதனால் அவை அகற்றப்பட்ட நிலையில், டாக்டரின் அலட்சியத்தால் தான் குழந்தைகள் இறந்தன என, கீர்த்தியின் குடும்பத்தினர் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரங்காரெட்டி மாவட்ட மருத்துவ அதிகாரி வெங்கடேஸ்வர் ராவ் கூறுகையில், “தீவிர சிகிச்சையை செவிலியரை வைத்து செய்த டாக்டரின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படும்,” என்று கூறியுள்ளார்.
அத்துடன், மருத்துவ துறை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Pregnant woman treated through video call Twins die