டில்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு: மேலும் 4 பேரை கைது செய்துள்ள என்ஐஏ அதிகாரிகள்..!
NIA officials have arrested 4 more people in connection with the Delhi Red Fort car blast
தலைநகர் டில்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில், மேலும் 04 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இதனையடுத்து கைதானவர்களின் எண்ணிக்கை 06 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த அக்டோபரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை ஆதரித்து, ஜம்மு - காஷ்மீரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இது தொடர்பாக ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதில் என்ற டாக்டரை போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் ஜெய்ஷ் -இ -முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த காஷ்மீரைச் சேர்ந்த முஸாமில் அகமது கனி, அதில் அகமது மற்றும் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த ஷாஹீன் சயீத் உள்ளிட்ட மூன்று டாக்டர்களை போலீசார் மேலும், கைது செய்தனர்.

இவர்கள் மூவருமே, ஹரியானாவின் அல்-பலாஹ் மருத்துவப் பல்கலையில் பணியாற்றியவர்கள் என விசாரணையில் தெரிய வந்தது. அதன் பின்னர் பரிதாப்பாத்தில் உள்ள அப்பல்கலை வளாகம் அருகே பதுக்கி வைத்திருந்த 360 கிலோ வெடிபொருட்களையும் போலீசார் கைப்பற்றினர். இதே பல்கலையைச் சேர்ந்த டாக்டர் உமர் நபிக்கு இவர்களுடன் தொடர்பு இருப்பது தெரிந்தது.
அவரை போலீசார் தேடி வந்த நிலையில், டில்லியில் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஓட்டிச் சென்று செங்கோட்டை அருகே வெடிக்க வைத்தார். இதில் பயங்கரவாதி உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்தனர். இதில், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து நடந்த போலீசார் விசாரணையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய காஷ்மீர் மாநிலம் சோபியானைச் சேர்ந்த மதகுரு இர்பான் அஹமது வாகே (31) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு தீவிரமாக விசாரித்து வருகின்றது. அவர்களின் விசாரணையை தொடங்கியதில், உமர் நபி ஓட்டிச் சென்ற காரின் உரிமையாளர் அமிர் ரஷீத் அலி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்கிய ஜசீர் பிலால் வானி என்ற டேனிஸ் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், டில்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு வழக்கில் முசாமில் ஷகீர், அதீல் அஹமது, ஷாகீன் சயீத் மற்றும் முப்தி இர்பான் அஹமது வாகேவை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து இந்த 04 பேரையும் கைது செய்த என்ஐஏ அதிகாரிகள், கார் குண்டுவெடிப்பு வழக்கில் இவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு எனத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 06 ஆக அதிகரித்துள்ளது.
என்ஐஏ அதிகாரிகளால் இன்று கைது செய்யப்ப நான்கு பேரையும் நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அவர்களை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
English Summary
NIA officials have arrested 4 more people in connection with the Delhi Red Fort car blast