பெங்களூரு அக்ரஹாரா சிறையில் கைதிகள் கையில் செல்போன்; சிறை தலைமை இயக்குனரை பழிவாங்க திட்டம்; வார்டன்கள் 3 பேர் சஸ்பெண்ட்..!
Mobile Phones Found in the Hands of Inmates at Bengaluru Agrahara Jail 3 Wardens Suspended
பெங்களூருவின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், கைதிகள் செல்போன் பயன்படுத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிறை வார்டன்கள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கு செல்போன்கள், டிவி என சொகுசு வசதிகளுடன் கூடிய சொகுசு வாழ்க்கை கிடைப்பதாகக் தொடர்ந்து சர்ச்சைகள் வெளியாகி வருகிறது. இதனால் அக்ரஹாரா சிறைக்குள் நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் விஐபி உபசரிப்பு ஆகியவற்றிற்கு எதிராக சிறைத்துறை தலைமை இயக்குநர் அலோக்குமார் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வந்தார்.அத்துடன், எல்லைமீறும் கைதிகளை தனி செல்லில் அடைத்துச் சிறப்பாகக் கவனித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கைதிகள் சிலர் சில சர்ச்சை வீடியோக்களை இணையத்தில் கசிய விட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையை சிக்கலில் சிக்க வைத்துள்ளனர்.
இந்நிலையில், அக்ரஹாரா சிறை முழுக்க அதிகாரிகள் ரைடு நடத்தினர். அதில் 09-ஆம் எண் சிறையில் பால் பாக்கெட்டுகளில் நேக்காக சுற்றப்பட்டு, வடிகால் குழாய்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன்கள் பல சிக்கியுள்ளன. அத்துடன் சிறைச்சாலை குறித்து, சர்ச்சை வீடியோவை வெளியிட்டதாக தர்ஷன், அபி மற்றும் ஆண்ட்ரூஸ் ஆகிய மூன்று கைதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஹென்னூர் பாண்டே கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தர்ஷன் மற்றும் அபி இருவரும் சிறை தலைமை இயக்குநர் அலோக் குமாரை பழிவாங்கும் நோக்கில் ஆண்ட்ரூஸை வைத்து கைதிகள் செல்போன் பயன்படுத்தும் வீடியோக்களை லீக் செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.
அதாவது, விசாரணையின் போது, சிறை விதிகளைக் கடுமையாக்கியதற்காக பழிவாங்குவதற்காக அலோக் குமாரை சிக்க வைப்பதே தங்களின் நோக்கம் என்று அந்த மூவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இதனிடையே, சிறைச்சாலையில், பணியில் அலட்சியமாக இருந்ததற்காக சிவானந்தா, நிரஞ்சன் ஏ. காமத் மற்றும் ஹனுமந்தப்பா ஆகிய மூன்று வார்டன்களை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து டிஜிபி அலோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், உயர் பாதுகாப்பு சிறைகளுக்குள் கைபேசிகள் எவ்வாறு ஊடுருவின என்பதை விளக்கி ஒரு முறையான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு சிறை அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை தொடர்வதால், குற்றம் சாட்டப்பட்ட மூன்று கைதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
English Summary
Mobile Phones Found in the Hands of Inmates at Bengaluru Agrahara Jail 3 Wardens Suspended