வங்காள மொழியை வங்கதேச மொழி என்ற டெல்லி போலீஸ்: 'இந்தியா முழுவதும் வங்காளம் பேசும் மக்களுக்கு ஏற்பட்ட அவமானம்' என மம்தா பானர்ஜி கண்டனம்..!
Mamata Banerjee slams Delhi Police for calling Bengali a Bangladeshi language
டில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களை கண்டறியும் பணியில் டெல்லி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கதேசத்தை சேர்ந்த 08 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பில் டில்லியில் வசிக்கும் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு டில்லி போலீசார் கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். அந்தக்கடிதத்தில், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மொழிபெயர்க்க வங்கதேச மொழியில் புலமை பெற்றவர்கள் தேவை எனக்குறிப்பிடபட்டுள்ளது. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் அலுவல் மொழியும் வங்காள மொழி. அதேப்போன்று வங்கதேசத்தில் பெரும்பான்மையான மக்கள் வங்காள மொழியில் தான் பேசி வருகின்றனர். ஆனால், வங்காள மொழி என போலீசார் குறிப்பிடாமல் வங்கதேச மொழி என டில்லி போலீசார் குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டில்லி போலீசார் வங்காள மொழியை ' வங்கதேச' மொழி என குறிப்பிடுகின்றனர்.
வங்காள மொழி எங்கள் தாய்மொழி. ரபிந்திரநாத் தாகூர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் மொழி. தேசிய கீதம், பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய தேசிய பாடல் ஆகியவை எழுதப்பட்ட மொழி என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கோடிக்கணக்கான மக்கள் எழுதிய மற்றும் பேசிய மொழி என்றும், இந்திய அரசியலமைப்பால் புனிதப்படுத்தப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மொழி வாங்க மொழி. இப்போது வங்கதேச மொழியாக விவரிக்கப்படுகிறது. இது அவதூறான, அவமானகரமான, தேச விரோதமான அரசியலமைப்புக்கு எதிரானது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், இது இந்தியா முழுவதும் வங்காளம் பேசும் மக்களுக்கு ஏற்பட்ட அவமானம் என்றும், நம் அனைவரையும் இழிவுபடுத்தும் இந்த வகையான மொழியை அவர்களால் பயன்படுத்தக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் வங்காள மொழி பேசும் மக்களை அவமதிக்கவும், அவமானப்படுத்தவும் இதுபோன்ற அரசியலமைப்பு விரோத மொழியை பயன்படுத்தும் வங்காள எதிர்ப்பு இந்திய அரசுக்கு எதிராக வலிமையான எதிர்ப்பை பதிவு செய்து செய்கிறோம் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
English Summary
Mamata Banerjee slams Delhi Police for calling Bengali a Bangladeshi language