வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தபட்ட 'பாகுபலி' ராக்கெட்; இஸ்ரோ புதிய சாதனை..!
LVM 3 M5 rocket Bahubali rocket successfully launched
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சிஎம்எஸ்-03 உடன் எல்விஎம் 3 எம் 5 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (நவம்பர் 02) மாலை 05.26 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
4,410 கிலோ எடை கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சிஎம்எஸ்-03 ஐ விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட் டவுன் நேற்று மாலை தொடங்கப்பட்டது.
இந்த மகிழ்ச்சியான தருணத்திற்கு பிறகு இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது: 'செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்தத் திட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது' என்று தெரிவித்தார்.
இந்திய கடற்படை மற்றும் ராணுவ பயன்பாட்டுக்காக இந்த செயற்கைக்கோள் ரூ.1,600 கோடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கடற்படை தகவல் தொடர்பு மற்றும் கடலோர பாதுகாப்புக்கு ஊக்கம் அளிக்கவுள்ளது. அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் என்பதால், எல்விஎம் 3- எம்5 ராக்கெட் பாகுபலி ராக்கெட் என அழைக்கப்படுகிறது. இந்த சிஎம்எஸ் -03 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதை கடற்படை அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் நேரில் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

எல்விஎம் 3- எம்5 ராக்கெட் சிறப்பு அம்சங்கள்:
ராக்கெட் பெயர்: எல்விஎம்3- எம்5
சிஎம்எஸ்-03, மல்டி பேண்ட் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்.
பிஎஸ்எல்வி- ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்களை விட, அதிக எடையை சுமந்தும் செல்லும் திறன் உடையது.
சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளின் பயன்கள்:
இந்திய நிலப்பரப்பில் மல்டி பேண்ட் தொலைதொடர்பு சேவைகள்.
அதிக அலைவரிசை மற்றும் வாய்ஸ், டேட்டா மற்றும் வீடியோ தொடர்புக்கான மேம்பட்ட பாதுகாப்பு இணைப்புகள்.
கடல்சார் கண்காணிப்பை மேம்படுத்தும், கடற்படை கட்டளை மற்றும் கட்டுப்பாட்டை வலுப்படுத்தும்.
English Summary
LVM 3 M5 rocket Bahubali rocket successfully launched