குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தனியார் வசம்? இயக்கம், பராமரிப்புக்கு நிறுவனங்களுக்கு அழைப்பு!
Kulasekarapattinam rocket launch pad to be handed over to the private sector Companies invited for operations and maintenance
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ சார்பில் அமைக்கப்பட்டு வரும் புதிய ராக்கெட் ஏவுதளத்தின் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் தற்போதைய முக்கிய ராக்கெட் ஏவுதளம் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி உள்ளிட்ட பல்வேறு ராக்கெட்டுகள் மூலம் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன.
நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை அமைப்பதற்காக தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக சுமார் 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து ஏவுதளத்துக்கான கட்டமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. கையகப்படுத்தப்பட்ட நிலத்தைச் சுற்றி கருங்கற்களால் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதன் மேற்பகுதியில் இரும்புக் கம்பிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், அலுவலகக் கட்டடங்கள், ராக்கெட் லாஞ்ச் சர்வீஸ் பில்டிங், இஸ்ரோ லாஞ்ச் காம்ப்ளக்ஸ் மற்றும் ராக்கெட் லாஞ்சிங் பேட் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஒரே நேரத்தில் மூன்று ஹெலிகாப்டர்களைத் தரையிறக்கும் வகையில் ஹெலிபேட் வசதிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகளை நிறைவு செய்து அங்கிருந்து ராக்கெட் ஏவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், சுமார் ரூ.986 கோடி மதிப்பில் உருவாகி வரும் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தின் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏவுதளத்தின் முழுமையான நிர்வாகம், அன்றாட இயக்கம் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்குத் தேவையான செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக தகுதியான தனியார் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் குலசேகரப்பட்டினம் ஏவுதளம், இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் செயல்படும் நிலையில், அதன் சில இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பையும் பெறும் புதிய நடைமுறை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உருவாகி வரும் இந்த இரண்டாவது ராக்கெட் ஏவுதளம், குறிப்பாக சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் செயல்பாடுகளில் தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது விண்வெளித் துறையில் புதிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Kulasekarapattinam rocket launch pad to be handed over to the private sector Companies invited for operations and maintenance