‘அழகு’ வலை விரித்த ‘ஹனிடிராப்’ கும்பல்...! சிக்கிய வாலிபர்கள்... 5 பேர் அதிரடி கைது...!
Honeytrap gang that spread web beauty youths caught 5 people arrested crackdown
கர்நாடக மாநிலத்தின் தாவணகெரே மாவட்ட புறநகர் பகுதியில் வசிக்கும் பிரபல தொழில் அதிபரின் 25 வயது மகன், மர்ம ஹனிடிராப் கும்பலின் சதித் திட்டத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த இளைஞருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்ட இளம் பெண், காதல் மற்றும் உல்லாச வாக்குறுதிகள் மூலம் அவரை மனரீதியாக வசப்படுத்தியுள்ளார்.
பின்னர் ஆள்நடமாட்டம் குறைந்த தனிமையான பகுதிக்கு அழைத்துச் சென்று, தனது கூட்டாளிகளுடன் இணைந்து இளைஞரை மிரட்டியதுடன், அவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகளை செல்போனில் பதிவு செய்து ஹனிடிராப் வலையில் சிக்கவைத்துள்ளார்.அதனைத் தொடர்ந்து அந்த கும்பல், வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி இளைஞரிடமிருந்து பணம் மற்றும் தங்க நகைகளை பறித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தால் மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞர், தாவணகெரே புறநகர் காவலர்களிடம் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணையில் இறங்கிய காவலர்கள், திட்டமிட்டு வலைவீசி ஹனிடிராப் கும்பலை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் தாவணகெரே பகுதியை சேர்ந்த பஞ்சமி, ஜெகதீஷ், கங்கா மல்லேஷ் நாயக் மற்றும் வெங்கடேஷ் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த கும்பல் பணக்கார இளைஞர்களை குறிவைத்து காதல் வலையில் சிக்கவைத்து, பின்னர் மிரட்டல் மூலம் நகை மற்றும் பணத்தை பறிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பஞ்சமி என்பவர் இளைஞர்களை தொடர்புகொண்டு ஆசை வார்த்தைகள் கூறி தனிமையான இடங்களுக்கு அழைத்துச் சென்று, அங்கு கூட்டாளிகளுடன் இணைந்து பணம் மற்றும் நகைகளை அபகரித்து வந்தது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 80 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த மோசடி கும்பல் பல இளைஞர்களை இதேபோன்ற ஹனிடிராப் சதியில் சிக்கவைத்து பணம் மற்றும் நகைகளை அபகரித்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சுரேஷ் என்பவரையும் காவலர்கள் கைது செய்துள்ளனர்.இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் பலர் இருக்கக்கூடும் என்பதால், கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் காவலர்கள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Honeytrap gang that spread web beauty youths caught 5 people arrested crackdown