ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்: இனி சார்ட் போட்ட பிறகும் டிக்கெட் புக் செய்யலாம்.. முழு விவரம்!
Good news for train passengers Now you can book tickets even after booking
இந்தியாவில் தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்து வரும் நிலையில், முக்கிய ரயில்களில் டிக்கெட் கிடைப்பது இன்று மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது. சொகுசு ரயில்கள், அதிவேக விரைவு ரயில்கள், விரைவு ரயில்கள், சாதாரண முன்பதிவில்லாத ரயில்கள், மெமு ரயில்கள் என பல்வேறு வகையான ரயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும், பயணிகள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வந்தே பாரத், தேஜாஸ், சதாப்தி, தூரந்தோ, ராஜ்தானி போன்ற அதிவேக விரைவு ரயில்களுக்கு டிக்கெட் கிடைப்பது பெரும்பாலான நேரங்களில் “குதிரைக் கொம்பு” போலவே இருந்து வருகிறது. இதனால் கடைசி நேரத்தில் பயணம் செய்ய வேண்டியவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வந்தது.
பொதுவாக ஒரு ரயில் புறப்படுவதற்கு முன்பு இரண்டு முறை உறுதி செய்யப்பட்ட பயணிகளின் பட்டியல், அதாவது சார்ட் வெளியிடப்படும். முன்னதாக ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பாக சார்ட் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது முதல் சார்ட் 8 மணி நேரத்திற்கு முன்பாக வெளியிடப்படுகிறது. இதுவே முதல் சார்ட் ஆகும். இதனைத் தொடர்ந்து, ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் முன்பு இரண்டாவது மற்றும் இறுதி சார்ட் வெளியிடப்படும்.
இதுவரை, முதல் சார்ட் வெளியான பிறகு அந்த ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது. ஆனால் தற்போது, இந்தியன் ரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இனிமேல் ரயில் புறப்படுவதற்கு முன்பாக கடைசி சார்ட் போடும் அரை மணி நேரம் வரை டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதல் சார்ட் வெளியான பிறகு, அந்த ரயிலில் பெர்த்கள் அல்லது இருக்கைகள் காலியாக இருந்தால், அதன் விவரங்கள் ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) தளத்தில் காட்டப்படும். காலியாக உள்ள இருக்கைகள் எண்ணிக்கையைப் பொறுத்து பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இதன் மூலம், கடைசி நேரத்தில் பயணம் செய்ய விரும்புவோர் தங்களுக்கு தேவையான ரயிலில் டிக்கெட் பெற்றுச் செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த வசதியின் கீழ், பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி அதிகாரப்பூர்வ இணையதளம், மொபைல் செயலி அல்லது ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு கவுண்ட்டர்களின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மொத்தத்தில், இந்த புதிய அறிவிப்பு அவசர பயணிகளுக்கும், கடைசி நேர திட்டமிடலுடன் பயணம் செய்யும் மக்களுக்கும் பெரிய நிம்மதியை அளிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
English Summary
Good news for train passengers Now you can book tickets even after booking