முதல்கட்ட வாக்குப்பதிவு பரபரப்பு...! - பாதுகாப்பு வலையத்தில் பீகார்..!
First phase voting exciting Bihar security zone
பீகார் மாநில அரசின் எதிர்காலம் இன்று வாக்குப்பெட்டியில் முடிவாக இருக்கிறது! 121 சட்டசபை தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது.இரு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலின் இரண்டாம் கட்டம் வரும் 11-ஆம் தேதி நடைபெறும். கடந்த சில நாட்களாக தேர்தல் களம் பரபரப்பாக இருந்தது. பல்வேறு கட்சித் தலைவர்கள் கடைசி நேர பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் பிரசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங், உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடைசி நாளில் வாக்கு வேட்டையில் முழுசாக இறங்கினர்.

வாக்காளர் விவரங்கள்:
மொத்தம் 3 கோடி 75 லட்சம் வாக்காளர்கள் இன்று தங்கள் வாக்குரிமையைச் செலுத்தவுள்ளனர்.
இதில் 10 லட்சத்து 72 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள்;
அவர்களில் 7 லட்சத்து 38 ஆயிரம் பேர் இளம் தலைமுறை — 18 மற்றும் 19 வயது கொண்டவர்கள்.மொத்தம் 1,314 வேட்பாளர்கள் களத்தில் தங்கள் அதிர்ஷ்டத்தைச் சோதிக்கின்றனர். இதில் 122 பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை வேட்பாளர் போட்டியிடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய வேட்பாளர்கள்:
இந்தியா கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் (ரகோபூர் தொகுதி),
அவரது அண்ணன் தேஜ்பிரதாப் யாதவ் (மஹுவா),
துணை முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி (தாராபூர்),
முன்னாள் சபாநாயகர் விஜய்குமார் சின்ஹா (லக்கிசாரை) உள்ளிட்ட 16 மந்திரிகள் போட்டியிடும் முக்கிய தொகுதிகளாக விளங்குகின்றன.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
மொத்தம் 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலானவை கிராமப்புறங்களில் அமைந்துள்ளன.
முதல்கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு பல அடுக்குகளில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
1,650 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் மாநிலம் முழுவதும் களமிறங்கியுள்ளனர்.
முக்கிய கட்டிடங்கள், சாலைகள் மற்றும் வாக்குச்சாவடிகள் சுற்றிலும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
DGP வினய்குமார் தெரிவித்ததாவது,"குற்றப் பின்னணியுள்ளவர்கள் மீது தீவிர கண்காணிப்பு வைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தம் 348 பார்வையாளர்கள் நேரடியாக கண்காணிப்பு செய்கின்றனர்.”
வாக்குப்பதிவு நேரம்:
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
மாலை 5 மணிக்கு முன் வரிசையில் நிற்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
English Summary
First phase voting exciting Bihar security zone