ஐதராபாத்தில் உள்ள மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
Drugs worth Rs 12000 crore seized from a pharmaceutical factory in Hyderabad
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம், மீரா சாலையில் இளம் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்ததை போலிசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் வங்கதேசத்தைச் சேர்ந்த பாத்திமா முராக் ஷேக் (23) என்பதும், அவரிடம் இருந்து 105 கிராம் எடையுள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதும் தெரியவந்தது.
அவரிடம் நடைபெற்ற விசாரணையில், அந்தப் போதைப்பொருள் ஐதராபாத்தில் செயல்பட்டு வந்த தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்டதென தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அந்த மருந்து தொழிற்சாலையை ரகசியமாக கண்காணித்து வந்த போலிசார், நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு மருந்து தயாரித்துக் கொண்டிருந்த 12 பேரை கைது செய்ததோடு, ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கூடுதலாக, 27 செல்போன்கள், 3 கார்கள், 4 மின்னணு எடை இயந்திரங்கள், மற்றும் போதைப்பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.
போலிசார் தெரிவித்ததாவது:“இந்த தொழிற்சாலையில் இருந்து நாடு முழுவதும் இடைத்தரகர்கள் மூலம் போதைப்பொருள் சங்கிலி போன்று விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையை கண்டுபிடிப்பது மிகக் கடினமான சவாலாக இருந்தது. ஆனால், முக்கிய நபர்களை கைது செய்துள்ளோம். பிடிபட்டவர்களின் மூலம் நாடு முழுவதும் இன்னும் பலர் கைது செய்யப்பட உள்ளனர்” என்று தெரிவித்தனர்.
English Summary
Drugs worth Rs 12000 crore seized from a pharmaceutical factory in Hyderabad