அனுமதி பெற்றுதான் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்தேன் - சி.ஆர்.பி.எப். வீரர் விளக்கம்.!
crpf soldier explain pakisthan women marriage
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதன் படி, பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த மேனல் கான் என்ற பெண்ணை கடந்த ஆண்டு் வீடியோ கால் அழைப்பு மூலம் திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்த அவரது விசா மார்ச் 22-ந் தேதியோடு முடிவடைந்த நிலையில், தொடர்ந்து அவர் இந்தியாவில் தங்கி இருந்தார். பஹல்காம் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானை சேர்ந்தவர்களை வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டதால், மேனல் கான் பாகிஸ்தானுக்கு நாடு கடத்த திட்டமிடப்பட்டது.
இதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து அந்தப்பெண் முனிர் அகமதுவின் வீட்டில் தங்கியுள்ளார். இதற்கிடையே பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்ததை மறைத்தது மற்றும் விசா காலம் முடிந்தும் அவரை இந்தியாவில் தங்க வைக்க உதவி செய்தது உள்ளிட்ட காரணங்களுக்காக முனிர் அகமது தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அனுமதி பெற்றே பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்ததாக பணி நீக்கம் செய்யப்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- "முதலில் ஊடக அறிக்கைகள் மூலம் எனது பணிநீக்கம் குறித்து எனக்கு தெரியவந்தது.
அதன் பின்னர் மத்திய ரிசர்வ் காவல் படையிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அது எனக்கும், என் குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் எனது பிரமாண பத்திரம் மற்றும் எனது பெற்றோர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் உறுப்பினரின் பிரமாண பத்திரங்களை முறையான வழிகளில் சமர்ப்பித்து கடந்த ஆண்டு மத்திய ரிசர்வ் காவல் படை தலைமையகத்தில் திருமணத்துக்கு அனுமதி பெற்றேன்.
ஆட்சேபனையில்லா சான்றிதழுக்கு விண்ணப்பித்தேன். ஆனால் அது கிடைக்கவில்லை. விதிகளின்படி வெளிநாட்டவருடனான எனது திருமணம் குறித்து அரசுக்கு தெரிவித்து ஏற்கனவே சம்பிரதாயங்களை முடித்து விட்டேன். நான் பணியமர்த்தப்பட்ட எனது 72-வது பட்டாலியனுக்கு திருமண படங்கள், திருமண ஆவணங்கள் மற்றும் திருமண சான்றிதழை சமர்ப்பித்தேன்.
எனது மனைவிக்கு கடந்த மார்ச் மாதத்திலேயே நீண்ட கால விசாவுக்கு விண்ணப்பித்தோம். நேர்காணல் உள்ளிட்ட தேவையான சம்பிரதாயங்களை நாங்கள் முடித்துள்ளோம். எனது மனைவியின் நாடு கடத்தலுக்கு லடாக் உயர்நீதிமன்றம் நிவாரணம் வழங்கியது. எனது பணிநீக்கத்தை எதிர்த்து சட்ட நடவடிக்கையாக நீதிமன்றத்தை நாடப்போகிறேன்" என்று தெரிவித்தார்.
English Summary
crpf soldier explain pakisthan women marriage