'டிரம்பின் மிரட்டலின் போது மோடி ''மௌன பாபா'' ஆகிவிடுகிறார்'; காங்கிரஸ் கடும் விமர்சனம்..! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார். இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காப்பதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. 

சர்வதேச எதிர்ப்புகளை மீறி இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் அதிகளவில் இறக்குமதி செய்து வருகிறது. இதற்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அத்துடன், இந்தியாவின் இந்தச் எண்ணெய் கொள்முதல், உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவுக்கு நிதியுதவி செய்வது போல் உள்ளது என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக்கொள்வதாக பிரதமர் மோடி தன்னிடம் உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். ஆனால், இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே சமீபத்தில் எவ்வித தொலைபேசி உரையாடலும் நடைபெறவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.  இந்த சூழல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிவொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளதாவது:

'ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தை கடந்த ஐந்து நாட்களில் மட்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மூன்று முறை எழுப்பியுள்ளார். புடாபெஸ்டில் ரஷ்ய அதிபர் புதினை சந்திப்பதற்கு முன்பு இந்த எண்ணிக்கையை அவர் இன்னும் அதிகரிப்பார் என்பதில் சந்தேகமில்லை.

தனது நல்ல நண்பரான மோடியிடம் அவர் பேசியதாகவும், இறக்குமதியை நிறுத்த இந்தியா உறுதியளித்துள்ளதாகவும் டிரம்ப் கூறுகிறார். ஆனால், அத்தகைய உரையாடல்கள் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகிறது. வெளியுறவுத்துறையின் இந்த மறுப்பை டிரம்ப் தெளிவாக நிராகரித்துள்ளார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று  'ஆபரேஷன் சிந்தூர்' விவகாரத்திலும், ரஷ்ய எண்ணெய் இறக்குமதி விவகாரத்திலும் டிரம்ப் பேசும்போதெல்லாம் பிரதமர் மோடி 'மௌனி பாபா' ஆகிவிடுகிறார் என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார். அத்துடன், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் சிதைந்து விட்டதாகவும், பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பைக் கண்டு அஞ்சுகிறார் என்றும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress strongly criticizes Modi for becoming silent baba amid Trumps threats


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->