மேற்கு வங்கம், அசாமின் அடுத்த முதல்வர் யார்..? தேர்வு செய்ய மத்திய பார்வையாளர்களாக அமித் ஷா, நட்டா நியமனம்..!
Amit Shah and Nadda Appointed as Central Observers to Select the Next Chief Ministers of West Bengal and Assam
மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் அபார வெற்றிப் பெற்றுள்ளது. இந்நிலையில், கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை அக்கட்சிகள் தொடங்கியுள்ள நிலையில், இந்த மாநிலங்களுக்கான மத்திய பார்வையாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
மேற்கு வங்க வரலாற்றில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 293 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட்டுள்ளன. ஒரு தொகுதியில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 147 இடங்கள் தேவை எனும் நிலையில், கூடுதலாக 60 தொகுதிகளை பாஜக கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில், அம்மாநிலத்தில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மம்தா பானர்ஜியை கடந்த தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் தோற்கடித்த சுவேந்து அதிகாரி பாஜகவின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த தேர்தலிலும், மம்தா போட்டியிட்ட பபானிபூர் தொகுதியிலும் அவரை எதிர்த்துப் போட்டியிட்டு சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றுள்ளார்.

அதன்படி, மேற்கு வங்கத்தில் பாஜகவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக சுவேந்து அதிகாரி பார்க்கப்படும் நிலையில், அவர் முதல்வராக பதவியேற்கும் வகையில் கட்சியின் எம்எல்ஏக்கள் அவரை பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், பாஜக மூத்த தலைவரான திலீப் கோஷ், மூத்த பெண் தலைவரான அக்னிமித்ரா பால், பாஜக மாநில தலைவரான ஷமிக் பட்டாச்சார்யா ஆகியோரின் பெயர்களும் முதல்வர் பதவிக்கு அடிபடுகின்றன.
இந்த சூழலில், கட்சியின் சட்டமன்றக் குழு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் மத்திய பார்வையாளராக அமித் ஷாவை பாஜக நியமித்துள்ள நிலையில், ஒடிசா முதல்வர் மோகன் சரண் முன்னாள், மத்திய இணைப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், அசாமில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 126 தொகுதிகளில் பாஜக 82 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. அறுதிப் பெரும்பான்மைக்கு 63 தொகுதிகள் தேவை என்ற நிலையில், 19 தொகுதிகளை பாஜக கூடுதலாகப் பெற்றுள்ளது.

அங்கு கூட்டணி கட்சிகளான போடோலாந்து மக்கள் முன்னணி மற்றும் அசாம் கன பரிஷத் ஆகியவை தலா 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் ஆட்சி முறை மற்றும் திறமையே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. எனவே, மீண்டும் அவர் முதல்வராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அசாம் மாநில பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் கவுகாத்தியில் விரைவில் நடைபெறவுள்ளது. இதில் பாஜகவின் மத்திய பார்வையாளராக ஜே.பி. நட்டா நியமிக்கப்பட்டுள்ளார். இணை மத்திய பார்வையாளராக ஹரியானா மாநில முதல்வர் நாயப் சிங் சைனி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று, புதுச்சேரியிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இங்கு மொத்தமுள்ள 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில், என்ஆர் காங்கிரஸ் 12, பாஜக 04, லட்சிய ஜனநாயகக் கட்சி 01 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
இங்கு பாஜக சட்டமன்றக் குழு தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் விரைவில் புதுச்சேரியில் நடைபெறவுள்ளது. இதில் பாஜகவின் மத்திய பார்வையாளராக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நியமிக்கப்பட்டுள்ளார். இணை மத்திய பார்வையாளராக புதுச்சேரிக்கான பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா நியமிக்கப்பட்டுள்ளார்.
English Summary
Amit Shah and Nadda Appointed as Central Observers to Select the Next Chief Ministers of West Bengal and Assam