பேய் மழையில் பெரும் வெள்ளம்: தத்தளிக்கும் இமாசல பிரதேச மக்கள்: வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலி, பலர் மாயம்..!
4 dead and many missing in Himachal Pradesh due to heavy floods
இமாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வவதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. அத்துடன், அம்மாநிலத்தில் பிரபல சுற்றுலா மலை நகரமான சிம்லா, சம்பா, குலு உள்ளிட்ட பகுதியில் மேக வெடிப்பு காரணமாக கன மழை பெய்துள்ளது.
கனமழையின் எதிரொலியாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. மேலும், சிம்லா பட்டாக்குப்பரில் 05 மாடி கட்டிடம் நொடிப்பொழுதில் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதில் வசித்து வந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். அதன் காரணமாக பாரிய உயிர் சேதம் தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த கட்டிடத்தின் அருகில் இருக்கும் 02 கட்டிடங்கள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அளவில் அபாயத்தில் உள்ளது.
நிலச்சரிவின் காரணமாக பல வீடுகள் இடிந்த நிலையில், சாலைகளில் கற்கள் விழுந்து கிடப்பதாலும், சேதமாகி கிடப்பதாலும் 259 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மண்டி பகுதியில் மேகவெடிப்பால் பெய்த மழை காரணமாக ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மழை தொடர்பான சம்பவங்களினால் 04 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் மாயமாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறதோடு, பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
English Summary
4 dead and many missing in Himachal Pradesh due to heavy floods