இடைத்தேர்தல் தோல்வி பயத்தில், நாடாளுமன்ற தேர்தல் வியூகத்தை கையில் எடுத்த ஸ்டாலின்! திமுகவினர் உற்சாகம்!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும்  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 21ம் தேதி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், தற்போது பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிட, விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் திமுக போட்டியிடுகிறது. இரண்டு தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியில் அதிமுகவே போட்டியிடுகிறது. 

இதில் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் திமுக இருக்கிறது. ஏனெனில் இந்த தொகுதியின் வெற்றி தோல்வி தான், அடுத்து வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற பொதுத்தேர்தலில் பிரதிபலிக்க கூடும் என்பதால் இந்த தொகுதியில் வெற்றி பெற்று விட வேண்டும் என திமுக கருதுகிறது. மேலும் இந்த தொகுதியானது திமுகவிடும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் ராதாமணி மறைந்ததாலே இந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

அதனால் இந்த தொகுதியில் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் திமுக இருக்கிறது. இந்த தொகுதியில் மிகப் பெரும்பான்மையாக வசிப்பது வன்னியர் சமுதாய மக்கள் தான். அதன் காரணமாகவே இந்த தொகுதியில் பாமக மிகவும் பலமாகவே இருக்கிறது. கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலின் போதே அதிமுகவும், திமுகவும் சுமார் 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை வாங்க, பாமக தனியாக நின்று 45 ஆயிரம் வாக்குகளை வாங்கியது. அதேபோல அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலிலும், விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் பாமக  சார்பில் போட்டியிட்ட வடிவேல் ராவணன் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளார். 

இந்நிலையில் தற்போது அதிமுகவுடன் பாமக கூட்டணியாக உள்ள நிலையில், இந்த தொகுதியில் வெற்றி பெறுவது என்பது திமுகவிற்கு மிகவும் சவாலானதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் தோல்வி முகம் என ரகசிய சர்வே தெரிவிக்க, அதனை சரிக்கட்ட கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக பயன்படுத்திய அதே வியூகத்தை, மீண்டும் பயன்படுத்த திமுக திட்டமிட்டுள்ளது. 

அதன்படி இன்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன், வன்னியர் சமுதாயத்திற்காக இட ஒதுக்கீடு கோரி, போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு, விழுப்புரம் மாவட்டத்திலேயே மணி மண்டபமும், வன்னியர் சமுதாயத்தின் தனிப்பெருந் தலைவராகவும், பேரறிஞர் அண்ணா அவர்களது அமைச்சரவையில் வேளாண்மைத்துறை அமைச்சராகவும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது அமைச்சரவையில் உணவு மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சராகவும் பணியாற்றி மறைந்த, "ஏஜி"என அறிஞர் அண்ணா அவர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட, திரு. ஏ.கோவிந்தசாமி படையாச்சியார் அவர்களுக்கு மணி மண்டபமும் அமைக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார். 

இட ஒதுக்கீடு போராட்டம் நடைபெற்று 32 வருடங்கள் ஆகிறது. அதன்பிறகு திமுக மூன்று முறை ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது. இவ்வளவு வருடங்கள் இல்லாது இப்போது ஏன் அறிவிக்க வேண்டும் என்ற கேள்வி எழாமல் இல்லை. அதேபோல அண்ணாவின், கலைஞரின் முதல் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த கோவிந்தசாமி படையாட்சியாருக்கு, அதுவும் திமுகவிற்கு உதயசூரியன் சின்னத்தை வழங்கிய கோவிந்தசாமி படையாட்சியாருக்கு இதுவரை ஏன் மணிமண்டபம் கட்டவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. திமுக முதன்முதலில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 23 வருடம் தமிழகத்தில் ஆட்சி செய்தது திமுக. அப்போதெல்லாம் திமுக முன்னோடியான கோவிந்தசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம் கட்டவில்லை, ஏன் அறிவிக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் திடீரென இந்த அறிவிப்பு வந்ததற்கு, முழுக்க முழுக்க காரணம் விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர்கள் திமுகவை முழுவதுமாக புறக்கணிப்பார்கள் என்ற சர்வே தகவல் தான் என தெரிய வந்துள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியை உள்ளடக்கிய விழுப்புரம் மாவட்டத்தினை, திமுக மூன்று மாவட்டங்களாக நிர்வாக ரீதியாக பிரித்துள்ளது. இந்த மாவட்டத்தில் மூன்று மாவட்ட செயலாளர்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை. பிற சமுதாயத்திற்கு முக்கியத்தும் கொடுத்துள்ள நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்து வன்னியர் மக்கள் சார்பில் "உழைப்பது ஒருவர் அனுபவிப்பது ஒருவரா" என கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. எல்லாவற்றிக்கும் மேலாக மணிமண்டபம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள கோவிந்தசாமி படையாட்சியார் மகனான ஏஜி சம்பத் மாவட்ட செயலாளராக இருந்தவர். அவர் அப்பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சாத்தியமே இல்லாத கல்விக் கடன் ரத்து, விவசாய கடன் ரத்து, நகை கடன் ரத்து என பல வாக்குறுதிகளை அள்ளி விட்டு தமிழகத்தில் வெற்றி பெற்றுவிட்டு, எதுவுமே நடைபெறாமல் தற்போது திமுக எம்பிக்கள் என்ன பதில் சொல்வது என தெரியாமல் கையை பிசைந்து கொண்டு உள்ளனர். அதேபோல தற்போது வன்னியர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை வன்னியர்கள் ஏற்றுக்கொண்டு திமுகவை ஆதரிப்பார்களா? அல்லது புறக்கணிப்பார்களா? என்பது தேர்தல் முடிவைப் பார்த்து தான் தெரியவரும்.  

மேலும் அதே ஸ்டாலின் அறிக்கையில், இந்த எட்டாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில், அப்படி, வன்னியர் சமுதாயத்தின் நலனுக்காகச் செய்த சாதனை என, ஒரு சாதனையையாவது விரல் விட்டுச் சொல்ல முடியுமா? நிச்சயம் முடியாது.  அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த அந்தத் தியாகிகளுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அரசு செவி கொடுத்தேனும் கேட்டதா? இல்லவே இல்லை." என தெரிவித்துள்ளார். 

இந்த ஆட்சி காலத்தில் வன்னிய மக்களின் நீண்ட கால கோரிக்கையான, வன்னியர் பொதுசொத்து நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காமராஜர் ஆட்சி அமைக்க காரணமான வன்னிய சமுதாயத்தில் இருந்து வந்த ராமசாமி படையாட்சியாருக்கு அவரது சொந்த ஊரான கடலூரில் மணிமண்டபம், சட்டப்பேரவை வளாகத்தில் அவரது உருவப்படம் என சிலவற்றை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk plan for vikravandi by election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->