ஏ.ஆர்.முருகதாஸ் அப்படி செஞ்சாரு..அது நடந்துடுச்சா? ‘சிக்கந்தர்’ படம் பற்றி ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்!
Did AR Murugadoss do that Rashmika Mandanna opens up about the film Sikandhar
இந்திய திரைத்துறையில் பான் இந்தியா அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வரும் அவர், தமிழ் சினிமாவில் மட்டும் பெரிய அளவில் ஜொலிக்க முடியாமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்து வருகிறது. இருப்பினும், பிற மொழிகளில் அவர் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.
கர்நாடக திரைத்துறையில் அறிமுகமாகி, தெலுங்கு திரையுலகில் ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் பிரபலமானவர் ராஷ்மிகா. அதன் பின்னர் அல்லு அர்ஜுனுடன் நடித்த ‘புஷ்பா’ மற்றும் ‘புஷ்பா 2’ படங்கள் பான் இந்தியா அளவில் மெகா ஹிட்டாகி, அவரது மார்க்கெட் மதிப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றன. இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக நிலைநிறுத்தப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் வாய்ப்புகள் குவிந்தன. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்த ‘அனிமல்’ திரைப்படம் சர்ச்சைகளைக் கிளப்பினாலும், ராஷ்மிகாவுக்கு அழுத்தமான அடையாளத்தை கொடுத்தது. சமீபத்தில் ‘தம்மா’ படத்தில் நடித்திருந்த அவர், தற்போது ‘காக்டெயில் 2’ உள்ளிட்ட ஹிந்தி படங்களில் பிஸியாக இருக்கிறார்.
இந்த நிலையில், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்த ‘சிக்கந்தர்’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் படுதோல்வியை சந்தித்தது. நீண்ட காலமாக வெற்றியில்லாமல் இருந்த முருகதாஸ், இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நடக்கவில்லை. தோல்விக்கு பின்னர், சல்மான் கானின் நடத்தை குறித்து முருகதாஸ் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்த விவகாரங்கள் பரபரப்பை ஏற்படுத்திய போதும், ராஷ்மிகா மந்தனா இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், ‘சிக்கந்தர்’ படம் குறித்து அவர் கூறிய கருத்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த பேட்டியில் ராஷ்மிகா, “சிக்கந்தர் படத்தின் கதையை என்னிடம் சொன்ன விதம் வேறு மாதிரி இருந்தது. ஆனால் படமாக எடுத்தது முற்றிலும் வேறொரு மாதிரி இருந்தது” என்று தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து, இயக்குநர்கள் கதை சொல்லும் போது ஒன்றாகவும், படமாக்கும் போது வேறாகவும் எடுத்துக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை மீண்டும் முன்வைத்துள்ளதாக ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே ‘சிக்கந்தர்’ படத்தைச் சுற்றி இயக்குநர் மற்றும் நடிகர் இடையிலான உரசல்கள் பேசப்பட்டு வந்த நிலையில், ராஷ்மிகா மந்தனாவின் இந்தக் கருத்து, அந்த சர்ச்சைக்கு மேலும் வலு சேர்த்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.
English Summary
Did AR Murugadoss do that Rashmika Mandanna opens up about the film Sikandhar