தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவர்... யார் இவர்?  - Seithipunal
Seithipunal


தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவர்...

1960களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர்... 

தமிழில் சிறுகதைகளும், ஆய்வுக்கட்டுரைகளும் எழுதும் எழுத்தாளர்...

தமிழில் பெண்ணியம் சார்ந்து எழுதிய முதன்மைப் படைப்பாளி என விமர்சகர்களால் கருதப்படுபவர்...

பெண்ணியக் களச்செயல்பாட்டாளர்... சமூகவியல் ஆய்வாளர்...

உறவு, காதல், திருமணம், அரசியல், இசை என்று பல்வேறு பரிமாணங்களைத் தொட்டவர்...

இவர் தான் சாகித்ய அகாடமி விருது பெற்ற பெண் எழுத்தாளர்.

அம்பை:

பிறப்பு :

சி.எஸ்.லட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட அம்பை கோயம்புத்தூர் மாவட்டத்தில் நவம்பர் 17ஆம் தேதி 1944ஆம் ஆண்டு பிறந்தார். வரலாற்றில் எம்.ஏ பட்டமும், அமெரிக்கன் ஸ்டடிஸில் முனைவர் பட்டமும் பெற்றார். இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் கன்னடத்தில் புலமை பெற்றவர் ஆவார்.

திருமணம் :

அம்பை 1976ஆம் ஆண்டு விஷ்ணு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் குழந்தைகள் இல்லை. 

எழுத்துப் பணி :

அம்பையின் முதல் படைப்பு நந்திமலைச் சாரலிலே 1960ஆம் ஆண்டு வெளிவந்த சிறுவர்களுக்கான துப்பறியும் சாகச நாவல் ஆகும். இது குழந்தைகள் பத்திரிக்கையான 'கண்ணன்" பத்திரிக்கையில் வெளியானது. அம்பையின் இரண்டாவது நாவலான அந்திமாலை கலைமகள் நாவல் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது. 

பிறகு 1967ஆம் ஆண்டு கணையாழி பத்திரிக்கையில் வெளியான சிறகுகள் முறியும் என்ற சிறுகதையே இவரது முதல் சிறுகதையாக முன்வைக்கப்படுகிறது.

அம்பை தமிழில் ஒரு புகழ்பெற்ற புனைகதை எழுத்தாளர். இவரது படைப்புகளில் பெண்களை பற்றிய உணர்ச்சிவசப்பட்ட, தெளிவான மற்றும் ஆழமான கருத்துக்களும், மேலும் நகைச்சுவையும் இருக்கும்.

பெண் எழுத்தாளர்கள், பெண் இசைக் கலைஞர்கள், பெண் நடனக் கலைஞர்கள் குறித்து இவர் மேற்கொண்ட ஆய்வுகள் 'The face behind the mask, The singer and the song, Mirrors and Gestures என்னும் புத்தகமாக வெளிவந்துள்ளன. பெண்ணியச் சிந்தனைகளையும், பெண்களின் மனங்களையும் வெளிப்படுத்தும் படைப்புகளை உருவாக்கியுள்ளார். 

இவர் சிறகுகள் முறியும், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, அந்திமழை, காட்டில் ஒரு மான், வற்றும் ஏரியின் மீன்கள் உள்ளிட்ட பல படைப்புகளை எழுதியுள்ளார். இதை தவிர ஆங்கிலத்திலும் கணிசமான நூல்களை எழுதியிருக்கிறார்.

அம்பை 'தங்கராஜ் எங்கே" சிறுவர் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். மேலும் 'முதல் அத்தியாயம்" என்ற சிறுகதையை திரைப்படமாக தயாரித்துள்ளார்.

இவர் டாக்டர் சி. எஸ். லட்சுமி என்ற தன்னுடைய இயற்பெயரில் தி இந்து, தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிக்கைகளுக்கு எழுதி வருகிறார்.

விருதுகள் :

2005ஆம் ஆண்டு விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் விருது.

2008ஆம் ஆண்டு டொரான்டோ பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் இலக்கிய விருது.

2008ஆம் ஆண்டு கனடா இலக்கியத் தோட்டம் இயல் விருது.

2011ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத்தில் உன்னதத்திற்கான விருது. 

2021ஆம் ஆண்டு சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருதையும் பெற்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cs lakshmi history in Tamil


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->