பணத்துக்கு ஆசைப்பட்டுச் சிறை செல்லாதீர்கள்: நூதன மோசடி குறித்து ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!
RBI Warns Citizens Against Money Mule Scams Sharing Your Bank Account for Easy Cash Could Lead to Jail
இந்தியாவில் இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் செயலிகள் மூலமாக ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அசாத்திய வளர்ச்சியைக் கண்டுள்ள அதே வேளையில், அதற்கு இணையாக டிஜிட்டல் மற்றும் இணையவழி மோசடிகளும் புதிய வடிவங்களில் அச்சுறுத்தி வருகின்றன. 'டிஜிட்டல் கைது' போன்ற மோசடிகளைத் தொடர்ந்து, தற்போது பொதுமக்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி அரங்கேறும் Money Mule எனப்படும் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற மோசடி குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வாட்ஸ்ஆப் மூலமாகப் பொதுமக்களுக்கு மிக முக்கியமான விழிப்புணர்வு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
Money Mule என்றால் என்ன?
யாராவது உங்களிடம், "உங்களுடைய வங்கிக் கணக்கை சில பணப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தால், உங்களுக்குக் கைமாறாகச் சுலபமாகப் பணம் அல்லது கமிஷன் தருகிறோம்" எனக் கூறினால், அவர்கள் உங்களை மாற்ற முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம். அதாவது, ஆன்லைன் கொள்ளையர்கள் தாங்கள் சட்டவிரோதமான வழிகளில் கொள்ளையடித்த பணத்தைக் காவல்துறையிடம் இருந்து மறைப்பதற்காக, சாமானிய மக்களின் கணக்குகளை இடைத்தரகராகப் பயன்படுத்திப் பணப் பரிமாற்றம் செய்வதே இந்த மோசடியின் அடிப்படை வடிவமாகும்.
ஆர்.பி.ஐ-யின் முக்கிய வழிகாட்டுதல்கள்:
உங்கள் கணக்கு = உங்கள் பணம்: உங்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்கை மற்றவர்கள் தங்களின் பணப் பரிமாற்றங்களுக்காகப் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
சிறைத்தண்டனை அபாயம்: உங்கள் கணக்கிற்குள் வரும் பணம் ஏதேனும் சைபர் குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக இருந்தால், கணக்கின் உரிமையாளர் என்ற அடிப்படையில் நீங்களே முதல் குற்றவாளியாகக் கருதப்பட்டுச் சிறைக்குச் செல்ல நேரிடும்.
ரகசியத் தரவுகள் பாதுகாப்பு: உங்களின் வங்கிப் பயனர் விவரங்கள், கடவுச்சொற்கள் (Passwords) மற்றும் மிக முக்கியமாக ஓடிபி (OTP) எண்களை யாரிடமும், எக்காரணம் கொண்டும் பகிரக் கூடாது.
சுலபமாகப் பணம் சம்பாதிக்கலாம் என்று வரும் எந்தவொரு குறுக்கு வழியும் பேராபத்தில் கொண்டு போய் முடிக்கும் என்பதைப் பொதுமக்கள் உணர வேண்டும். இதுகுறித்த கூடுதல் விபரங்களை அறிய ஆர்.பி.ஐ-யின் அதிகாரப்பூர்வத் தளமான [https://rbikehtahai.rbi.org.in/tamil/index.html](https://rbikehtahai.rbi.org.in/tamil/index.html) என்ற முகவரியைப் பயன்படுத்தலாம்.
ஆர்பிஐ சொல்கிறது - விவரமா இருங்க, எச்சரிக்கையா இருங்க! உங்களின் விழிப்புணர்வு ஒன்றே உங்களையும் உங்கள் உழைப்பின் பணத்தையும் ஆன்லைன் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்கும் ஒரே அரணாகும்.
English Summary
RBI Warns Citizens Against Money Mule Scams Sharing Your Bank Account for Easy Cash Could Lead to Jail