இந்தியாவில் ஹூண்டாய் அதிரடி திட்டம்: 5 ஆண்டுகளில் 26 புதிய மாடல்கள்! களமிறங்கும் 3 அதிரடி ஹைப்ரிட் SUV-கள்!
Hyundai action plan in India 26 new models in 5 years 3 exciting hybrid SUVs to be launched
தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், இந்திய சந்தையில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பெரிய வளர்ச்சித் திட்டத்தை அறிவித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 26 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் புதிய தலைமுறை கார்கள், பல்வேறு SUV-கள், ஒரு ஆஃப்-ரோடு SUV மற்றும் ஒரு MPV ஆகியவை இடம்பெறவுள்ளன.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக ஹைப்ரிட் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இந்திய சந்தைக்காக மூன்று புதிய ஹைப்ரிட் SUV-களை அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. 2027-ல் வரவிருக்கும் புதிய தலைமுறை கிரெட்டா, ஹூண்டாயின் முதல் ஹைப்ரிட் காராக இருக்கும். இதனைத் தொடர்ந்து Ni1i மற்றும் பாலிசேட் ஆகிய இரண்டு 7-சீட்டர் ஹைப்ரிட் SUV-களும் வெளியிடப்படவுள்ளன.
இதில் Ni1i SUV, அல்கசாரை விட உயர்ந்த நிலை மற்றும் டூஸானை விட குறைந்த பிரிவில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மஹிந்திரா XUV700, டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் போன்ற கார்களுடன் நேரடி போட்டியில் இறங்கும். இந்த மாடல் சீனாவில் விற்பனை செய்யப்படும் டூஸான் LWB-ஐ அடிப்படையாகக் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஹைப்ரிட் அமைப்பு இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு முக்கிய மாடலான பாலிசேட், உலக சந்தையில் ஏற்கனவே பிரபலமான ப்ரீமியம் SUV ஆகும். இந்தியாவிலும் இது அதேபோல் உயர்நிலை பிரிவில் அறிமுகமாகும். 2.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் கொண்ட இந்த SUV, சுமார் 334 bhp சக்தி மற்றும் 460 Nm டார்க்கை உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கும். மேலும், 14.1 கி.மீ. மைலேஜ் மற்றும் ஒரு முழு டேங்கில் 1,000 கி.மீ.க்கு மேல் பயணிக்கும் திறன் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்திய SUV சந்தையில் போட்டி அதிகரித்து வரும் நிலையில், அதிக மைலேஜ் மற்றும் குறைந்த மாசு வெளியீட்டை வழங்கும் ஹைப்ரிட் மாடல்களின் மூலம் ஹூண்டாய் தனது பங்கைக் கூட்ட முயற்சிக்கிறது. இந்த புதிய மாடல்கள் சந்தையில் அறிமுகமான பிறகு, இந்திய கார் சந்தையில் போட்டி மேலும் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Hyundai action plan in India 26 new models in 5 years 3 exciting hybrid SUVs to be launched