திமுக எம்எல்ஏக்களுக்கு மட்டுமே ஐ.பி.எல் பாஸ்.."வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை".. அதிமுக கொறடா குற்றச்சாட்டு..!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்பொழுது அதிமுக கொறடா வேலுமணி "அதிமுக ஆட்சியில் ஐபிஎல் போட்டிகளை பார்க்க எம்எல்ஏக்களுக்கு பாஸ் வழங்கப்பட்டது. தற்போது 300-400 பாஸ் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கவில்லை" என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ’’பாஸ் வேணும்னு கேக்குறீங்க... சட்டசபைக்கான பாஸா’’ என கிண்டல் செய்தார்.

பிறகு தனது பேச்சை தொடர்ந்த எஸ்.பி வேலுமணி "இல்லை ஐபிஎல் போட்டிக்கான பாஸ் கேட்கிறேன். அதுவும் விளையாட்டுதானே. அதனால்தான் மானியக் கோரிக்கையில் தெரியப்படுத்த விரும்புகிறேன். விளையாட்டுத்துறை அமைச்சர் அதற்கான வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்” என பேசி அமர்ந்தார்.

இதற்கு பதில் அளித்த விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "சென்னையில் நான்கு ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகள் நடக்கவே இல்லையே. அப்படி இருக்கும்போது நீங்கள் யாருக்குப் பாஸ் கொடுத்தீர்கள் எனத் தெரியவில்லை. ஐபிஎல் போட்டிகளை நடத்துவது பிசிசிஐ. அதற்கு உங்கள் நெருங்கிய நண்பரான அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாதான் தலைமை பொறுப்பில் உள்ளார்.

நாங்கள் கேட்டால் அவர்கள் பாஸ் தர வாய்ப்பில்லை. நீங்கள் கேட்டால் நிச்சயம் தருவார்கள். எனவே அவரிடம் பேசி அனைத்து எம்எல்ஏக்களுக்கும் ஐந்து பாஸ் வாங்கித் தந்தால் கூட போதுமானது. நாங்கள் அதற்கு காசு வேண்டுமானாலும் கொடுக்கிறோம். என் தொகுதியிலுள்ள 150 விளையாட்டு வீரர்களை என் சொந்த காசைக் கொடுத்தே போட்டியைக் காண வைக்கிறேன்" என பதில் அளித்தார்.

இந்த நிலையில் ஊடகங்களில் அதிமுக எம்எல்ஏக்கள் ஐபிஎல் பாஸ் கேட்பதாக செய்திகள் வெளியாகின. இதற்கு அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் "சட்டமன்றத்தில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும் பல்வேறு மக்கள் பிரச்சனைகள் மீதும் செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள பக்கங்கள் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக ஆட்சிக் காலத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பாஸ் வழங்கப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு ஆளும் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பாஸ் வழங்கப்படாததால் எதிர்க்கட்சி கொறடா என்ற முறையிலும், விளையாட்டு துறை மானிய கோரிக்கையின் போதுதான் கேட்க முடியும் என்பதாலும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஐபிஎல் போட்டிகளுக்கான பாஸ் வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் கேட்டேன்.

மேலும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் வெளிச்சந்தையில்சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. சட்ட விரோத டிக்கெட் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார். 

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியது போல் 300 முதல் 400  ஐபிஎல் பாஸ்கள் வழங்கப்படுமாயின் அவை யாருக்கு வழங்கப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. மேலும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் சொந்த தொகுதிகளில் உள்ள 150 விளையாட்டு வீரர் வீராங்கனைகளை ஐபிஎல் போட்டியை காண அழைத்துச் செல்வதாக கூறுவது தன் சொந்த செலவில் தானா..? அல்லது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாஸ் மூலமா..? என அதிமுகவினர் சந்தேகம் எழுப்புகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SP Velumani alleges DMK MLAs only got IPL passes


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->