தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு தமிழக அரசாலே வந்த ஆபத்து! டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து, வகுப்புகள் தொடங்கிய பிறகு ஏதேனும் காரணங்களுக்காக விலகும் மாணவர்கள் ரூ.10 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என்று தமிழக அறிவித்துள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆதரவான சமூகநீதிக்கு எதிரான தமிழக அரசின் இந்த புதிய நிலைப்பாடு அதிர்ச்சியளிக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தேர்வுக்குழு இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுகள் ஜூலை மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் கல்லூரிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 18-ஆம் தேதி நிறைவடையும். மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து ஆகஸ்ட் 2 முதல் 19 வரையிலான காலக்கட்டத்தில் படிப்பிலிருந்து விலகுபவர்கள் ரூ. 1 லட்சமும், அதற்குப் பிறகு விலகுபவர்கள் ரூ.10 லட்சமும் அபராதம் செலுத்த  வேண்டும் என்றும் தேர்வுக்குழு அறிவித்துள்ளது. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 4 லட்சம் வரையிலும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.12.50 லட்சமும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த அளவுக்கு பணம் கட்டி சேர்ந்த மாணவர்கள், திடீரென விலகி விட்டால் அவர்கள் மூலம் அடுத்தடுத்த ஆண்டுகளில் கிடைக்க வேண்டிய கட்டண வருவாய் பாதிக்கப்படும் என்பதால், அதைத் தடுக்கும் நோக்கத்துடன்  இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வருமானம் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை தேர்வுக்குழு உறுதி செய்திருக்கிறது. தனியார் கல்லூரிகளின் வருமானம் குறையாமல் பார்த்துக் கொள்வதில் தமிழக அரசு காட்டும் ஆர்வம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

தேசிய அளவில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த இந்திய மருத்துவக் குழு அனுமதி வழங்கியுள்ளது. அதனால், ஏற்கனவே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள், அதைவிட சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைக்கும் போது அதில் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை. ஒரு கல்லூரியை விட சிறந்த இன்னொரு கல்லூரியில் இடம் கிடைக்கும் போது அதில் சேருவதற்கான மாணவர்களின் உரிமையை யாரும் தடுக்க முடியாது. அதுமட்டுமின்றி சில மாணவர்கள் தொடக்கத்தில் கடன் வாங்கி ஒரு பருவத்திற்கான கட்டணத்தை மட்டும் கட்டியிருப்பார்கள். அதன்பின் தொடர்ந்து படிக்க வசதியில்லாததால் மருத்துவம் அல்லாத வேறு கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முயலுவார்கள். அத்தகைய மாணவர்களும் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்பது அட்டூழியமானது. இதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது.

இதில் கொடுமை என்னவென்றால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் இடையில் விலகினால் அவர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படுவதில்லை. அரசுக்கு இழப்பு ஏற்பட்டால் பரவாயில்லை... தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வருமானம் பாதிக்கப்படக்கூடாது என்று நினைக்கும் அரசு மக்கள் நலன் காக்கும் அரசாக இருக்க முடியாது. மாறாக தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணக் கொள்ளைக்கு சட்டப்பாதுகாப்பு வழங்கும் தரகர் அரசாகத் தான் இருக்க முடியும்.

தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வேறு பள்ளிகளில் இடம் கிடைத்து அங்கு சேரும்போது, ஏற்கனவே படித்தப் பள்ளியில் நடப்புப் பருவத்திற்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது என்று தமிழக அரசே அறிவுறுத்தியுள்ளது. அதே விதி தான் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் பொருந்த வேண்டும். அதற்கு மாறாக ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பது மிகப்பெரிய சமூக அநீதி.

தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிவடைந்த பின்னர் ஒரு மாணவர் விலகினால், அந்த இடத்தில் இன்னொரு மாணவரை சேர்க்க முடியாது என்பது உண்மை தான். இதனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பது சரி தான். ஆனால், இதற்கான தீர்வு மாணவர்களிடம் அபராதம் வசூலிப்பது அல்ல. மாறாக, இந்திய மருத்துவக் குழுவுடன் பேசி ஏதேனும் மாணவர்கள் விலகினால் அவர்களுக்கு பதில் வேறு மாணவர்களை அரசுத் தேர்வுக்குழு மூலமாக  சேர்க்க வகை செய்வது தான் சரியானதாக இருக்கும். கடந்த ஆண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சுமார் 70 விழுக்காட்டு இடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததை அறிந்த இந்திய மருத்துவக் குழு அவற்றை நிரப்பிக்கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கியது. அதேபோல், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாகும் இடங்களை நிரப்பிக்கொள்ளவும் இந்திய மருத்துவக் குழு அனுமதிக்கலாம். இதன்மூலம் மருத்துவ இடங்கள் வீணாகாமல் தடுக்கப்படுவதுடன், கூடுதல் மாணவர்களுக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.

எனவே, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, மாணவர்கள் விலகுவதால் காலியாகும் இடங்களை அடுத்த நிலையிலுள்ள மாணவர்களைக் கொண்டு நிரப்புவதற்கு வகை செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 lakh fine for medical students when they droped their studies


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->