ரஷ்யாவுக்கு பதில் வெனிசுலா… எண்ணெய் மாற்றத்தால் இந்தியாவுக்கு 27,000 கோடி சேமிப்பு!
Venezuela instead of Russia India saves 27000 crore due oil switch
ரஷ்யாவைச் சார்ந்திருந்த கச்சா எண்ணெய் இறக்குமதியை மாற்றி, வெனிசுலாவை நோக்கி இந்தியா புதிய எரிசக்தி பாதையைத் திறந்திருக்கிறது. இந்த மாற்று முடிவு நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரிய பலனாக அமையும் என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ.) வெளியிட்ட ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்தால், ஆண்டுக்கு சுமார் 300 கோடி டாலர் இந்திய மதிப்பில் ரூ.27,000 கோடி வரை சேமிக்க முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் பலன்களில், வெனிசுலா எண்ணெய் இறக்குமதியால் கிடைக்கும் செலவுக் குறைப்பு முதலிடத்தில் இருப்பதாக அறிக்கை கூறுகிறது. குறிப்பாக, ‘மெரி 16’ வகை கனரக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதன் மூலம், ரஷ்யாவிலிருந்து பெறப்பட்ட அளவை குறைத்து, குறைந்த விலையில் அதிகளவு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யலாம்.
மேலும், வெனிசுலா எண்ணெய்க்கு ஒரு பேரலுக்கு 10 முதல் 12 டாலர் வரை தள்ளுபடி கிடைக்கும் வாய்ப்பு இருப்பது கூடுதல் நன்மையாக பார்க்கப்படுகிறது. இதனால் உள்நாட்டு பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும் மட்டுமல்லாமல், ரஷ்யா வழங்கிய தள்ளுபடி குறைந்ததால் ஏற்பட்ட இழப்பையும் ஈடுசெய்ய முடியும்.
இதனுடன், அமெரிக்கா வழங்கியுள்ள வரிச்சலுகைகள், இந்தியப் பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சி, பணவீக்க கட்டுப்பாடு போன்ற அம்சங்கள் அனைத்தும் இந்திய பொருளாதாரத்திற்கு சாதகமாக அமையும் என அறிக்கை வலியுறுத்துகிறது.
உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்ய எண்ணெய் இறக்குமதி 30 சதவீதத்தைத் தாண்டிய நிலையில், தற்போது வெனிசுலா, ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து எண்ணெய் பெறும் வாய்ப்பு இந்தியாவுக்கு உருவாகியுள்ளது.
அதே நேரத்தில், விவசாயம் மற்றும் பால் உற்பத்தி போன்ற உள்நாட்டு துறைகளின் நலன்கள் பாதிக்கப்படாமல் கவனமாக வர்த்தக தாராளமயமாக்கல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் எஸ்.பி.ஐ. எச்சரிக்கை விடுத்துள்ளது.
மொத்தத்தில், இந்த புதிய ஒப்பந்தம் இந்தியாவின் ஏற்றுமதி திறனை உயர்த்துவதோடு, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பையும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக மதிப்பிடப்படுகிறது.
English Summary
Venezuela instead of Russia India saves 27000 crore due oil switch