தூக்கமின்மை பிரச்சினையால் சிகிச்சை பெற்று வந்த பிரபல மாடல் அழகி, கோமா நிலையில் உயிரிழப்பு..!
Taiwanese model dies after falling into coma while receiving treatment for insomnia
தைவானைச் சேர்ந்த பிரபல கார் ஷோ மாடல் அழகியான சாய் யூசின், தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் எடுத்துக்கொண்ட சிகிச்சையால் கோமா நிலைக்கு சென்ற நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சாய் யூசினின் மரணம் சமூக ஊடகங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளாகத் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்த அவர், நண்பரின் பரிந்துரையின் பேரில் தைபேவில் உள்ள ‘ஃபேரி கிளினிக்’ என்ற மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு ‘கொழுப்பு நீக்குதலின் தந்தை’ என்று அழைக்கப்படும் மருத்துவர் வூ ஷாவோஹுகின் பரிந்துரைப்படி, ‘பால் ஊசி’ எனப்படும் மயக்க மருந்தைச் செலுத்தியுள்ளார்.

அறுவை சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் புரோபோஃபால் என்ற மருந்தைச் செலுத்திய பிறகு மருத்துவர் வூ ஷாவோஹு அறையை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது அங்கு ஒரு ஆண் உதவியாளர் மட்டுமே இருந்துள்ளார்.
அந்த நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிழை காரணமாக, சாய் யூசின் உடலுக்குள் குறுகிய நேரத்தில் அதிகப்படியான மயக்க மருந்து செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, சுவாச நின்று போயுள்ளது.
அருகில் இருந்த உதவியாளர் பதற்றத்துடன் மருத்துவருக்குத் தகவல் அளித்துள்ளார். அப்போது மருத்துவர் வீடியோ கால் மூலமாக முதலுதவி செய்ய வழிகாட்டியபடியே மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். ஆனால், அவர் வருவதற்குள் சாய் யூசினின் சுவாசம் நின்று, இதயம் செயலிழந்து விட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், 18 நாட்கள் கோமா நிலையில் இருந்துள்ளார்.

சாய் யூசின் குணமடைவதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லாததால், அவரது குடும்பத்தினர் கடந்த 12-ஆம் தேதி, உயிர்காக்கும் கருவிகளை அகற்ற முடிவு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து அவர் சாய் யூசின் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, மருத்துவர் வூ ஷாவோஹு மீது கவனக்குறைவால் கடுமையான காயம் ஏற்படுத்துதல் மற்றும் மருத்துவப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அத்துடன் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
English Summary
Taiwanese model dies after falling into coma while receiving treatment for insomnia