நோபல் வென்ற குரலை மௌனப்படுத்த முயலும் ஈரான்: நர்கீஸ் முகமதிக்கு மேலும் 7 ஆண்டுகள்...!
Iran attempts silence Nobel winning voice Narges Mohammadi sentenced another 7 years
ஈரானின் அடக்குமுறைக்கு அஞ்சாத குரலாக உலகம் முழுவதும் அறியப்படும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மனித உரிமை போராளி நர்கீஸ் முகமதிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.53 வயதான நர்கீஸ் முகமதி, ஈரான் அரசின் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் சிறைச் சுவர்களும் அவரது மன உறுதியை கட்டுப்படுத்த முடியவில்லை.இதற்கிடையில், ஹிஜாப் அணியாத காரணத்தால் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 22 வயதான மாஷா அமீனியின் மரணம், ஈரான் முழுவதும் பெரும் கோப அலைகளை எழுப்பியது.
அந்த சம்பவம் நாடு தழுவிய மக்கள் எழுச்சியாக மாறியது. அந்தப் போராட்டங்களுக்கு நர்கீஸ் முகமதி சிறையிலிருந்தபடியே ஆதரவு திரட்டி, எதிர்ப்பின் சின்னமாக உயர்ந்தார்.அவரது தைரியமும் மனித உரிமைக்கான அர்ப்பணிப்பும் உலக கவனத்தை ஈர்த்ததால், 2023 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்த பெருமையைப் பெற்ற 19-வது பெண்ணாகவும், ஈரானின் இரண்டாவது பெண்ணாகவும் அவர் வரலாறு படைத்தார்.இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி முதல் சிறைச்சாலையிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய அவர், மீண்டும் அதிகாரிகளின் கோபத்துக்கு இலக்கானார்.
அதன் விளைவாக, ஏற்கனவே சிறையில் இருக்கும் நர்கீஸ் முகமதிக்கு மேலும் 7 ஆண்டுகள் தண்டனை விதித்து ஈரான் அரசு உத்தரவிட்டுள்ளது.
அச்சுறுத்தல்களும் தண்டனைகளும் இருந்தாலும், நர்கீஸ் முகமதியின் குரல் இன்னும் மௌனமாகவில்லை,அது ஈரானின் சுதந்திரக் கனவுக்கான ஒலியாக தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
English Summary
Iran attempts silence Nobel winning voice Narges Mohammadi sentenced another 7 years