33 ஆண்டுகள் கழித்து...! டிரம்ப் உத்தரவால் அமெரிக்கா மீண்டும் அணு சோதனைக்கு தயாராகிறது...!
After 33 years America preparing another nuclear test Trumps orders
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, டொனால்ட் டிரம்ப் உலகளாவிய அரசியலில் தனது கடுமையான முடிவுகளால் அடிக்கடி செய்திகளில் இடம்பெற்று வந்தார். குறிப்பாக, சீனாவுக்கு எதிராக எடுத்த பொருளாதார நடவடிக்கைகள், இரண்டு நாடுகளுக்கிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது, அந்த பதட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது.இந்த சூழலில், தென்கொரியாவின் புசான் நகரில் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே முக்கியமான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. உலகம் முழுவதும் கவனம் செலுத்திய இந்த சந்திப்புக்கு முன்பாகவே, டிரம்ப் ஒரு அதிரடி உத்தரவைக் கொடுத்தார்.

அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க.1992 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது முழு 33 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கா மீண்டும் அணு சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது. இந்த முடிவு சர்வதேச அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,“அமெரிக்கா தற்போது உலகில் மிக அதிகமான அணு ஆயுதங்களை கொண்ட நாடாக உள்ளது. என் முதல் ஆட்சிக் காலத்தில் மேற்கொண்ட நவீனமயமாதல் நடவடிக்கைகளே இதற்கு காரணம். ஆயுத எண்ணிக்கையில் ரஷ்யா இரண்டாமிடத்திலும், சீனா மூன்றாமிடத்திலும் உள்ளன. ஆனால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் சீனாவின் நிலைமை நம்மை சமமாகச் சந்திக்கும்,”என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,“மற்ற நாடுகளின் பரிசோதனை திட்டங்களை கருத்தில் கொண்டு, நம்முடைய அணு திறனை மீண்டும் உறுதிப்படுத்துவது அவசியமாகியுள்ளது. அதற்காக, ‘Department of War’க்கு உடனடி சோதனை நடவடிக்கையைத் தொடங்க உத்தரவிடுகிறேன். இது இன்றே அமலாகும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
After 33 years America preparing another nuclear test Trumps orders