கணவனை காப்பாற்ற குதித்த மனைவி… ரெயில் விபத்தில் தம்பதி உயிரிழப்பு...!- 3 குழந்தைகள் பரிதாப நிலையில்...!
Wife jumps save husband Couple dies train accident 3 children pitiful condition
கள்ளக்குறிச்சி மாவட்டம் அய்யனார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவகண்டன் (37) மற்றும் அவரது மனைவி கலையரசி, மூன்று பெண் குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வந்தனர்.
அங்குள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்த இந்த தம்பதி, சொந்த ஊரில் நடைபெற்ற உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவசரமாக ஊர் திரும்ப முடிவு செய்தனர்.

இதற்காக மும்பையிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர்கள் பயணம் தொடங்கினர்.இன்று அதிகாலை, ஆரணி அருகே வடமாதிமங்கலம் பகுதியில் ரெயில் சென்று கொண்டிருந்தபோது, சிவகண்டன் கதவை திறந்து வெளியைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அச்சமயம் எதிர்பாராதவிதமாக கால் தவறி ஓடும் ரெயிலிலிருந்து கீழே விழுந்தார்.
கணவன் கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த கலையரசி, அவரை காப்பாற்ற முயன்றபோது தானும் சமநிலையை இழந்து ரெயிலிலிருந்து தவறி விழுந்தார். இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவத்தை கண்டு பதற்றமடைந்த சக பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த காட்பாடி ரெயில்வே காவலர்கள், இருவரின் உடல்களையும் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்திற்காக ஊர் திரும்பிய பயணம், கண நேரத்தில் சோகமாக முடிந்தது அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Wife jumps save husband Couple dies train accident 3 children pitiful condition