கல்யாணம் ஆகாதவர்களுக்கு அனுமதி இல்லை - பூங்காவில் வைக்கப்பட்ட பேனரால் பொதுமக்கள் அதிர்ச்சி.!!
unmarried not allowed banner in krishnagiri park
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மாநகராட்சியில் ராமநாயக்கன் ஏரிக்கரையில் மாநகராட்சி சார்பில் குழந்தைகள் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் நடைப்பயிற்சி பாதை, உடற்பயிற்சி மேற்கொள்வதற்கான கருவிகள், தியான மண்டபம், மரப்பூங்கா, சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உட்காருவதற்கு இருக்கைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
விடுமுறை நாட்களில் அப்பகுதியில் உள்ள மக்கள் குடும்பத்துடன் வந்து, பூங்காவில் பொழுது போக்குவதும், பகல் நேரத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் வந்து செல்வதும் மற்றும் பிறந்தநாள் கொண்டாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், இந்த பூங்காவில் இரவு நேர காவலாளி இல்லாததால் சமூக விரோத செயல்களும் நடந்து வந்ததனால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் காலை மற்றும் மாலையில் மட்டும் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், பூங்காவின் நுழைவு வாயிலில் நேற்று திருமணம் ஆகாதவர்களுக்கு பூங்காவிற்குள் அனுமதி இல்லை என்று பேனர் வைக்கப்பட்டது. அதில் தமிழக அரசின் முத்திரை, காவல்துறையின் முத்திரை, காவல் உதவி எண் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இந்த பேனரை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதையடுத்து அந்த பேனர் அகற்றப்பட்டது. இந்த பேனரை காவல்துறை சார்பில் வைக்கவில்லை என போலீசார் தெரிவித்த நிலையில், பேனரை கட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
unmarried not allowed banner in krishnagiri park