தமிழகத்தையே அதிரவைத்த திருவண்ணாமலை சிறுமி விவகாரம்! - தேசிய மகளிர் ஆணையம் நேரடியாக விசாரணை...! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரத்தை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி, விடுமுறை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் அருகிலுள்ள கல்பட்டு கிராமத்தில் தனது பாட்டி இல்லத்தில் தங்கியிருந்த நிலையில், அதிர்ச்சி கிளப்பும் கொடூரச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.இந்தச் சம்பவம் நடந்த இரவு, தனியாக இருந்த மாணவியை குறிவைத்து அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் முதலில் பேச்சில் ஈர்த்துள்ளனர்.

பின்னர் மிரட்டல் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அருகிலிருந்த தோட்டப்பகுதிக்கு பலவந்தமாக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, மனிதநேயத்தை சிதைக்கும் வகையில், 8 பேர் கொண்ட கும்பல் மாணவியை மீதான கொடூர வன்கொடுமையில் ஈடுபட்டு பின்னர் தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.

மிகுந்த மனஉளைச்சலுடன் வீட்டிற்கு திரும்பிய மாணவி, தன்னிடம் நேர்ந்த துயரத்தை உறவினர்களிடம் பகிர்ந்ததையடுத்து, குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மேல்சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், மாவட்ட அளவிலான காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையை தீவிரப்படுத்தினர். குற்றத்தில் ஈடுபட்டவர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டு, அந்த பகுதியில் முகாமிட்டு தகவல்கள் சேகரித்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சிகிச்சை பெற்று வரும் மாணவியிடம் நேரடியாக தகவல்கள் பெற்று, குற்றவாளிகள் குறித்த முக்கிய விபரங்களை அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தால் கல்பட்டு கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.இச்சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 3 பேர் சந்தேகத்தின் பேரில் காவலர்கள் வசம் எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த கொடூரச் சம்பவம் தேசிய அளவிலும் கவனம் பெற்றுள்ளது. தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை தொடங்குவதாக அறிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்ட பதிவில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுமி மீது நடைபெற்ற இந்த கொடூரத் தாக்குதல், பெண்களின் பாதுகாப்பு குறித்து தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளது.

இத்தகைய மனிதத்தன்மையற்ற செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிறுமிகளுக்கு எதிரான வன்முறை என்பது அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் உடனடி வழக்குப்பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவாக கைது செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 5 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tiruvannamalai girl case that shook Tamil Nadu National Commission Women directly investigate


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->