நீலகிரியில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட ஹோம் ஸ்டே விடுதிகளுக்கு சீல் வைத்த விவகாரம்; நகராட்சி அதிகாரிகளில் உத்தரவில் தலையிட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்..!
The Madras High Court has ruled that it cannot interfere in the order to seal homestays operating without proper authorization
நீலகிரி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் ஹோம் ஸ்டே விடுதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு அமர்வு கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
குறித்த உத்தரவின் அடிப்படையில், ஊட்டியில் அமைந்துள்ள ஹோம் ஸ்டே விடுதிகளை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன்படி, ஆகாஷ் ரூமஸ் அண்ட் காட்டேஜஸ் மற்றும் கோல்டன் லர்ச் ரெஸிடன்சி ஆகிய இரு விடுதிகளுக்கு உரிமம் இன்றி செயல்பட்டதாக கூறி சீல் வைத்து உத்தரவிட்டனர். அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ள நிலையில் முன்னறிவிப்பு இல்லாமல் சீல் வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, இரு விடுதிகள் சார்பிலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆய்வின்போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டதால், கட்டடத்தை பயன்படுத்த கூடாது என கடந்த ஆண்டு ஜூலை மாதம் நோட்டீஸ் அனுப்பியும், அதை அமல்படுத்தாததால் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலை, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிறப்பு அமர்வின் உத்தரவை அமல்படுத்தியதில் விதிமீறல் இருந்தால் மனுதாரர்கள், அதை சம்பந்தப்பட்ட சிறப்பு அமர்வின் கவனத்துக்கு தான் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பில் சிறப்பு அமர்வு கண்காணித்து வரும் நிலையில், அதுதொடர்பாக இந்த அமர்வு ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் அது சிறப்பு அமர்வு விசாரணை நடைமுறைகளை பாதிக்கும் என்றும் தெளிவுபடுத்தினார்.
அத்துடன், சீல் வைத்த உத்தரவுக்கு எதிராக அரசிடம் அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு அவகாசம் வழங்காமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தற்போது தலையிட முடியாது என கூறி வழக்குகளை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.
English Summary
The Madras High Court has ruled that it cannot interfere in the order to seal homestays operating without proper authorization