கண்துடைப்பு கருத்துக் கேட்பை ரத்து செய்க.. அதானியின் திட்டத்தை கைவிடுக - சி.பி.ஐ.எம் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


அதானியின் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை கைவிட வேண்டும். திட்டத்திற்கான கண்துடைப்பு கருத்துக் கேட்பினை ரத்து செய்ய வேண்டும். கார்ப்பரேட் கொள்ளைக்கு அரசு துணைபோகக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (எம்) வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சென்னை அருகே திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளியில் அமைந்திருக்கும் அதானியின் துறைமுகம், முன்பு  எல் அண்ட் டி நிறுவனத்தால் 330 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு சிறு துறைமுகமாக, சில ஏற்றுமதிக்காக மட்டும் அனுமதி பெற்று 2012-ம் ஆண்டில் இருந்து இயங்கி வந்தது. எல்அண்ட் டி நிறுவனத்தின்  சிறிய துறைமுகத்தை  2018-ல்  அதானி குழுமம் வாங்கியது. அதனை ஒரு பெரும் வர்த்தக துறைமுகமாக சுமார் 6000 ஏக்கர் அளவில் விரிவாக்கம் செய்ய அதானி குழுமம் திட்டம் தயாரித்துள்ளது. சுமார் 53 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்படவுள்ள இந்த துறைமுகத்தின்   சுற்றுச்சூழல், சூழல் தாக்க மதிப்பு ஆய்வு அறிக்கையை வெளியிடபட்டுள்ளது.

இந்த அறிக்கைகள் முழுமையாக தமிழில் மக்களிடம் கிடைக்க வழிவகை செய்யாமல் கருத்துக் கேட்பு கூட்டம் 2021 ஜனவரி 22 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் மக்கள் அதிகமாகவுள்ள காட்டுப்பள்ளியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல் மீஞ்சூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் இருக்கும் சூழ்நிலையில் அவசர, அவசரமாக இந்தக் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வியும் எழுந்துள்ளது.

பல நிபுணர்களும், மக்கள் பிரதிநிதிகளும் இந்த துறைமுக திட்டம் சட்டத்திற்கு புறம்பானது எனவும், அரசின் சுற்றுச்சூழல் மண்டல விதிகளுக்கும் புறம்பானது எனவும் ஆதாரப்பூர்வமாக கருத்து தெரிவித்துள்ளனர். துறைமுக விரிவாக்கம் நடைபெற்றால், மீதம் இருக்கின்ற கடற்கரையும் அரிக்கப்பட்டுவிடும் என்றும், கொற்றலை ஆறு கடலோடு கலந்துவிடும் அபாயம் உள்ளது எனவும் மக்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் எண்ணூர் -பழவேற்காடு மக்கள் வாழ்வாதாரம் இந்தத் திட்டத்தால் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகும். மீனவ மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் ஆபத்தும் உள்ளது. இதனால் இந்த திட்டம்  நிறுத்தப்பட வேண்டும் என்பது மக்களின் வலுவான கோரிக்கையாக  எழுந்துள்ளது.

காட்டுப்பள்ளி பகுதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ளது. அங்கு துறைமுக விரிவாக்கம் நடந்தால் ஒரு பக்கம் மண்சேர்ப்பும், மறுபக்கம் மண் அரிப்பும் அதிகரிக்கும். பழவேற்காடு ஏரியையும் கடலையும் சார்ந்திருக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பழவேற்காடு ஏரி, பக்கங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு ஆகியவை பாதிக்கப்படும். சுற்றியிருக்கும் விவசாயிகளும், மீனவர்களும் பாதிக்கப்படுவர்.

இத்திட்டத்திற்குத் தேவையான 6110 ஏக்கர் நிலப்பரப்பில், 2291 ஏக்கர் மக்களுக்குச் சொந்தமான நிலமும், 1515 ஏக்கர் TIDCOக்கு சொந்தமான தனியார் நிலமும்  கையகப்படுத்த உள்ளன. அத்துடன் சுமார் 1967 ஏக்கர் கடல் பரப்பையும் கைப்பற்ற உள்ளதால், கரைக்கடல் சேற்றுப் பகுதிகளில் சுமார் 6 கி.மீ நீளத்திற்கு 2000 ஏக்கர் பரப்பளவிற்கு மணல் கொட்டப்படும். இது கடுமையான சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும். கடல் உணவுகள் அதிகம் கிடைக்கும் இந்த பகுதியில் இந்த திட்டத்தால், மீன்வளம் வெகுவாகக் குறைந்திடும். இதனால், இப்பகுதியில் உள்ள பல  மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

பொருளாதார ரீதியாக பார்த்தால் அருகில் இருக்கும் காமராஜர் துறைமுகமும், சென்னை துறைமுகமும் அவற்றின் ஆற்றலில் 50 சதவீதம் கூட செயல்படவில்லை. எனவே, அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டால் இரண்டு பொதுத்துறை துறைமுகங்களும் மூடவேண்டிய அபாயம் ஏற்படும். இது அரசுக்கும், மக்களுக்கும் பேரிழப்பு.

இந்த திட்டத்தால் தமிழக வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்கும் வழியில்லை. வெறும் 1500 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால், அதானி பெரும் இலாப வேட்டை நடத்திட இந்த திட்டம் வாய்ப்பை ஏற்படுத்தும். இந்த கார்ப்பரேட் கொள்ளைக்கு அரசு துணைபோகக் கூடாது. எனவே, இந்த துறைமுக விரிவாகத் திட்டம் முழுமையாக கைவிடப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

கண்துடைப்பு போல் அறிவிக்கப்பட்டுள்ள ஜனவரி 22 மக்கள் கருத்து கேட்பு கூட்டமும் ரத்து செய்யப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. எக்காரணம் கொண்டும் இந்தப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு விரோதமாக இந்த திட்டத்தை அதானி குழுமம் முன்னெடுக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாக தெரிவித்துக் கொள்கிறது " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CPIM Request to Central Govt about Drop Adhani Harbor Project


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->