சிறுபான்மை மக்களுக்கு ஸ்டாலின் அரசு பாதுகாவலனாக விளங்குகிறது - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி...! - Seithipunal
Seithipunal


 தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில், இன்று சிறுபான்மையினர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பணி முன்னேற்றம் பற்றி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்துக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமை தாங்கி மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்கள். இந்த கூட்டத்தில், சிறுபான்மையினர் நலன் மூலம்  செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.  மேலும், அந்த திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்தும் கருத்து கேட்கப்பட்டது. தேவாலயங்கள், மசூதிகள் புனரமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. 

இதன் பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், 13 பேருக்கு தையல் எந்திரம், 10 பேருக்கு சிறு தொழில் நிதி உதவி, 54 பேருக்கு சிறு தொழில் நிதி உதவி, 45 பேருக்கு உலமாக்கள் நல வாரியம் மூலம் மிதிவண்டிகள், 28 பேருக்கு உலமாக்கள் நல வாரிய உறுப்பினர் அட்டை என மொத்தம் 162 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 7 ஆயிரத்து 945 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

இந்த நல திட்ட உதவிகளை அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சி முடிந்த பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:- 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, சிறுபான்மை மக்களுக்கு ஒரு பாதுகாவலனாக விளங்குகிறது. இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 3.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்க சட்டரீதியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.  

அந்தக் குழு மூலம் இதற்கான தீர்வு கிடைக்கும். மு .க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று பாடுபட்டு வருகிறது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அரசு பற்றி விமர்சிப்பதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், ஜவாஹிருல்லா, அண்ணாதுரை, தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin's government protector minorities


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->