கல்வியாளர் குமாரராணி டாக்டர் மீனா முத்தையா காலமானார்: முதல்வர் மு.க. ஸ்டாலின் உருக்கமான இரங்கல்!
Renowned Educationist and Arts Patron Dr Meena Muthiah Passes Away at 91 CM Stalin Expresses Condolences
கல்வியாளர், கொடையாளர் மற்றும் தஞ்சாவூர் ஓவியக்கலையின் பாதுகாவலர் என்று போற்றப்பட்ட குமாரராணி டாக்டர் மீனா முத்தையா (91) அவர்கள் இன்று காலமானார். வயது முதிர்வு தொடர்பான பாதிப்புகளால் ஊட்டியில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை இயற்கை எய்தினார். அவரது மறைவிற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
செட்டிநாட்டு அரசர் குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் மீனா முத்தையா, கலை மற்றும் கல்விச் சேவையைத் தனது வாழ்வின் இருபெரும் இலட்சியங்களாகக் கொண்டிருந்தவர். 'குமார ராஜா முத்தையா கலை மற்றும் கைவினைக் கலைப் பள்ளி' வாயிலாகப் பலருக்குப் பயிற்சி அளித்து, தஞ்சாவூர் ஓவியக்கலைக்கு அவர் புத்துயிர் ஊட்டியதை முதல்வர் தனது செய்தியில் பாராட்டியுள்ளார்.
தனிப்பட்ட முறையில் முதல்வர் ஸ்டாலினின் குடும்பத்துடன் நெருங்கிய நட்புறவைப் பேணி வந்த டாக்டர் மீனா முத்தையா, 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல்வரின் மனைவியின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்ததை முதல்வர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் கல்வி நிறுவன ஊழியர்களுக்குத் தனது ஆறுதலை முதல்வர் தெரிவித்துள்ளார்.
English Summary
Renowned Educationist and Arts Patron Dr Meena Muthiah Passes Away at 91 CM Stalin Expresses Condolences