வரிசை இல்லா பயணம்! ‘சென்னை ஒன்று’ செயலி 1 கோடி பயணச்சீட்டுகள்...! - புதிய மைல்கல்
Queue free travel Chennai One app sells 1 crore travel tickets New milestone
தமிழகத்தில் பொது போக்குவரத்து சேவையை முழுமையாக ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக, ‘சென்னை ஒன்று’ என்ற முன்னோடியான செல்போன் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
இந்தியாவிலேயே இதுபோன்ற ஒருங்கிணைந்த டிஜிட்டல் போக்குவரத்து தளம் அறிமுகமாகுவது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.இந்த செயலி, பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் மட்டுமின்றி டாக்சி மற்றும் ஆட்டோ சேவைகளையும் ஒரே தளத்தில் இணைத்து, ஒரே க்யூ.ஆர். குறியீட்டின் மூலம் பயணச்சீட்டை பெறும் வசதியை வழங்குகிறது.

இதன் மூலம் பயணிகள் தங்களது பயணத்தை எளிமையாக திட்டமிடுவதுடன், அனைத்து போக்குவரத்து சேவைகளின் நிகழ்நேர இயக்கத் தகவல்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது.மேலும், யு.பி.ஐ., வங்கி அட்டைகள் போன்ற டிஜிட்டல் கட்டண முறைகள் மூலம் உடனடியாக பயணச்சீட்டுகளைப் பெறும் வசதியும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஒரே பதிவு மூலம் பல்வேறு போக்குவரத்து முறைகளில் இடையூறு இல்லாமல் பயணம் செய்யும் அனுபவத்தை இந்த செயலி வழங்குகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘சென்னை ஒன்று’ செயலி, பொதுமக்களுக்கு எளிமையான மற்றும் விரைவான பயண அனுபவத்தை உருவாக்கும் முக்கியமான முன்னெடுப்பாக விளங்குகிறது. இதன் மூலம் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுக்கும் அவசியம் நீங்கியுள்ளது.
இந்த நிலையில், ‘சென்னை ஒன்று’ செயலி தற்போது புதிய சாதனையை எட்டியுள்ளது. இதன் மூலம் இதுவரை 1 கோடி பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சாதனை, நகர போக்குவரத்தில் டிஜிட்டல் மாற்றம் வேகமாக முன்னேறி வருவதை வெளிப்படுத்துகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Queue free travel Chennai One app sells 1 crore travel tickets New milestone