சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு தடை...! மீறினால் ரூ.1 லட்சம் அபராதம்...!
Pitbulls and Rottweilers banned Chennai Violation result fine 1 lakh
வாக்காளர் திருத்த சிறப்பு பணிகள் காரணமாக கடந்த மாதம் நடைபெறாமல் இருந்த சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், இன்று (வெள்ளிக்கிழமை) மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகர நிர்வாகம், பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்பான பல முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதில் முக்கியமாக, சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, நகரின் 200 வார்டுகளிலும் கழிவறை வசதிகளுடன் கூடிய ஓய்வறைகள் அமைக்கப்படும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, சென்னையில் பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு பிட்புல், ராட்வீலர் போன்ற ஆக்கிரமிப்புத் தன்மை கொண்ட நாய் இனங்களை புதிதாக வாங்கி வளர்ப்பதற்கு நாளை முதல் (டிசம்பர் 20) முழுத் தடை விதிக்கப்படும் என்றும் மாமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவை மீறி இந்நாய்களை வளர்ப்பவர்கள் மீது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், ஏற்கனவே உரிமம் பெற்ற பிட்புல் மற்றும் ராட்வீலர் நாய்களை வீட்டிற்கு வெளியே அழைத்துச் செல்லும்போது, கட்டாயமாக கழுத்துப்பட்டை (Leashing) மற்றும் வாய்க்கவசம் (Muzzling) அணிவிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை பின்பற்றத் தவறினால், உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதற்கு முன், சென்னையில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெற இன்றே கடைசி நாள் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருந்தது.
நாளை முதல், வீடு வீடாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உரிமம் பெறாத செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை மாநகராட்சி தகவலின்படி, தற்போது வரை 98,523 செல்லப் பிராணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 56,378 செல்லப் பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற வேண்டும் என மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.
English Summary
Pitbulls and Rottweilers banned Chennai Violation result fine 1 lakh