பெற்றோர்கள் உஷார்...! மாணவர்களை அடிமையாக்க முயன்ற கும்பல் சிக்கியது...! - ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் அதிரடி பறிமுதல்...!
Parents beware gang that tried enslave students caught Drug pills worth 5 lakhs seized crackdown
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகளின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதன் பிடியில் சிக்கி பாதிக்கப்படுவதாகவும் எழுந்த தொடர் புகார்களைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தின் உத்தரவின்பேரில் தனிப்பிரிவு காவலர்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.இந்த நடவடிக்கையின்போது, கொக்குடையான்பட்டியைச் சேர்ந்த திலீப்குமார் என்பவர் சந்தேகத்தின் அடிப்படையில் பிடிக்கப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், கீழச்செம்பட்டியைச் சேர்ந்த மூவேந்திரன் என்பவரிடமிருந்து போதை மாத்திரைகளை வாங்கி, உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தது அம்பலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, மூவேந்திரனை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்ட காவலர்கள், போதை மாத்திரை வாங்க வருவதாக கூறி அவரை வரவழைத்தனர்.

உசிலம்பட்டி அருகேயுள்ள தினா விலக்கு பகுதியில் நடைபெற்ற மறைமுக நடவடிக்கையில் மூவேந்திரன் கைது செய்யப்பட்டார்.அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான 1,800 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின்போது, மூவேந்திரனிடம் இருந்து போதை மாத்திரைகளை வாங்கிக் கொண்டிருந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த துரைப்பாண்டி என்ற பர்மாவும் சிக்கினார். அவரையும் கைது செய்த தனிப்பிரிவு காவலர்கள், மூவரையும் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கைதான மூவரிடமிருந்து ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பிலான போதை மாத்திரைகள், 20 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு செல்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும், கீழச்செம்பட்டியைச் சேர்ந்த மூவேந்திரன் இணையவழி மூலம் போதை மாத்திரைகளை பெற்று, திலீப்குமார் மற்றும் துரைப்பாண்டி மூலம் உசிலம்பட்டி பகுதி இளைஞர்களிடையே விநியோகம் செய்து வந்தது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வலையமைப்புடன் தொடர்புடைய மற்ற நபர்கள் யார்? போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எத்தனை பேர்? என்பது குறித்தும் உசிலம்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெய்கணேஷ் தலைமையிலான காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பிலான போதை மாத்திரைகள் சிக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Parents beware gang that tried enslave students caught Drug pills worth 5 lakhs seized crackdown