உறைபனியில் உறைந்த ஊட்டி...! ஊட்டி சுற்றுப்பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...!
Ooty frozen frost Normal life affected Ooty and surrounding areas
நீலகிரி மாவட்டத்தில் குளிர் மீண்டும் உச்சத்தைத் தொட்டுள்ளது. குறிப்பாக ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், தலைக்குந்தா, நீர்நிலைப் பகுதிகள் ஆகிய இடங்களில் அதிகாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவும் உறைபனியும் பரவலாக பதிவாகியுள்ளது.
அதிகாலை முதலே அடர்த்தியான பனிமூட்டம் சூழ்ந்ததால், வீடுகள், தோட்டங்கள், புல்வெளிகள் என அனைத்தும் வெள்ளைத் திரை போர்த்திய கனவுக் காட்சிபோல் தோற்றமளித்தன.

தலைக்குந்தா, எமரால்டு, அவலாஞ்சி உள்ளிட்ட உயரமான பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகரித்து, புல்வெளிகள், தேயிலை தோட்டங்கள், வாகனங்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் வரை வெண்மையான பனிக்கம்பளம் விரிந்தது போல காட்சியளித்தது.
கடும் பனிப்பொழிவின் காரணமாக காலை நேரங்களில் எலும்பை ஊடுருவும் குளிர் நிலவியது. இதனால் அன்றாட பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமத்தையும் அவதியையும் எதிர்கொண்டனர்.
மேலும், சாலைகள் கண்களுக்கு எட்டாத அளவுக்கு பனிமூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே மெதுவாக பயணம் செய்தனர்.
இதனிடையே, பொங்கல் விடுமுறையை கொண்டாட ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள், பனியால் மூடப்பட்ட இயற்கைக் காட்சிகளை கண்டு மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் இந்த அபூர்வமான காட்சிகளை புகைப்படங்களாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
English Summary
Ooty frozen frost Normal life affected Ooty and surrounding areas