வாட்ஸ்அப்-டெலிகிராம் வழி லாட்டரி மோசடி...! - உடனடி நடவடிக்கை கோரும் மக்கள்...!
Lottery scam via WhatsApp Telegram People demanding immediate action
தமிழ்நாட்டில் 2003ஆம் ஆண்டு முதல் லாட்டரி விற்பனைக்கு முழுமையான தடை அமலில் உள்ள நிலையில், அண்டை மாநிலங்களான கேரளா உள்ளிட்ட சில பகுதிகளில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்தத் தடை இருந்தபோதிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக ஆன்லைன் வழியாக லாட்டரி விற்பனை வேகமாக பரவி வருகிறது.
இந்த மோசடியில் ஈடுபடும் சமூக விரோத கும்பல்கள், தற்போது புதிய யுக்திகளை கையாள ஆரம்பித்துள்ளன. கேரளாவை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த கும்பல்கள், “சில மணி நேரங்களில் கோடீஸ்வரர் ஆகலாம்” என்ற ஆசை வார்த்தைகளை பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலம் பொதுமக்களை வலையில் சிக்கவைக்கின்றனர்.

ஆர்வம் காட்டுபவர்களை தனிப்பட்ட வாட்ஸ்அப் குழுக்களில் இணைத்து, அதில் உள்ள உறுப்பினர்கள் மூலம் புதியவர்களை சேர்க்கும் முறையை பின்பற்றுகின்றனர்.மேலும், இந்த கும்பல்கள் வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி பல்வேறு குழுக்களை உருவாக்கி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றன.
தினமும் பல முறை நடைபெறும் ஆன்லைன் லாட்டரி குலுக்கல்களில் பங்கேற்க விரும்புவோர், முன்கூட்டியே கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது. அதற்காக தனிப்பட்ட டிஜிட்டல் பண பரிமாற்ற எண்கள் வழங்கப்படுகின்றன.ரூ.12 முதல் ரூ.120 வரை பல்வேறு கட்டண நிலைகளில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகின்றன.
இதில் பங்கேற்கும் நபர்கள் தங்களுக்கு பிடித்த 6 இலக்க எண்ணை தேர்வு செய்து அனுப்ப வேண்டும். பின்னர் குலுக்கல் முடிவுகள் குழுவில் பகிரப்படும். சில நேரங்களில் குறைந்த பரிசுகள் வழங்கப்பட்டாலும், பெரிய பரிசுகள் வழங்கப்படும் என கூறி நம்பிக்கை உருவாக்கப்படுகிறது.
ஆனால் உண்மையில், பெரிய தொகைகளை வழங்காமல் இருக்க செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய மோசடி நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குலுக்கல் நிகழ்வுகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு குழுக்களில் பகிரப்பட்டாலும், யாரும் தேர்வு செய்யாத எண்களை AI மூலம் தேர்வு செய்து அதற்கே முதல் மற்றும் இரண்டாம் பரிசுகள் கிடைத்ததாக அறிவிக்கப்படுகின்றது.
இதனால், பொதுமக்கள் அதிக பணத்தை இழக்கும் சூழல் உருவாகிறது.காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆன்லைன் லாட்டரி மோசடி அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், இந்த செயல்பாடுகள் குறித்து காவலர்களின் கவனம் சென்றுள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
English Summary
Lottery scam via WhatsApp Telegram People demanding immediate action