கரூர்: மூன்றாவது நாளாக தொடரும் சிபிஐ விசாரணை!
Karur Stampede cbi
கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சிபிஐ குழு மூன்றாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. அதிகாரிகள் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை பணிகளை மேற்கொள்கின்றனர்.
முதல் நாளில் வீடியோகிராபர் ராஜசேகரன் உள்பட நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்ட சிபிஐ குழு, பின்னர் சம்பவம் நிகழ்ந்த வேலுச்சாமிபுரம் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தது. அப்போது கடைகள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள், பணியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் பற்றியும் அவர்கள் விரிவாக கேட்டறிந்தனர்.
அதன்பின், சம்பவ இடத்தை 3டி லேசர் ஸ்கேனர் கருவி மூலம் அளவீடு செய்யும் பணியும் நடந்தது. முதல் நாளில் 100 அடி வரை அளவீடு செய்யப்பட்டது; இது சுமார் 6½ மணி நேரம் நீடித்தது.
இரண்டாம் நாளாக நேற்று காலை 7 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சம்பவ இடத்துக்கு வந்து, சாலையின் இருபுறங்களிலும் 3டி லேசர் ஸ்கேனர் கருவியால் பரப்பளவுகளை பதிவுசெய்தனர். இந்தப் பணி மாலை 4.30 மணி வரை தொடர்ந்தது.
இன்று மூன்றாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் தொடர்பாக வேலுச்சாமிபுரத்தில் உள்ள 306 வணிகர்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு முன்பே சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது 10 பேர் கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரிகளிடம் ஆஜராகி விசாரணைக்கு உட்படுகின்றனர்.