GST வரி மாற்றத்திற்கு...பீகார் தேர்தல் காரணமா? டிரம்பின் வரி விதிப்பு காரணமா? - ப. சிதம்பரம் கேள்வி
Is the Bihar election the reason for the GST tax change Is it Trump's tax imposition P Chidambaram questions
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கியமான சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12% மற்றும் 28% என இரண்டு அடுக்குகள் நீக்கப்பட்டு, இனி 5% மற்றும் 18% ஆகிய இரண்டு அடுக்குகள் மட்டுமே அமலில் இருக்கும். இந்த புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை வரும் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
புதிய நடைமுறையின் படி, பல முக்கிய பொருட்கள் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. அன்றாடம் பயன்படுத்தப்படும் நெய், குடிநீர், மருந்துகள், மருத்துவ கருவிகள், தின்பண்டங்கள், சில வகை ஆடைகள் மற்றும் காலணிகள் போன்றவை குறைந்த வரி அடுக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. அதேசமயம், வீட்டு உபயோக மின்சாதனங்கள், குறைந்த விலை கார்கள் போன்றவை 28% இல் இருந்து 18% அடுக்குக்குள் குறைக்கப்பட்டுள்ளதால், இப்பொருட்களின் விலை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பதிவில் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், அதேசமயம் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தும் உள்ளார்.
அவர் பதிவில்,"ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் பொருட்கள் மீதான வரி குறைப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், சீர்திருத்தம் செய்வதற்கு எட்டு ஆண்டுகள் என்பது மிகுந்த தாமதமாகும். தற்போதைய ஜிஎஸ்டி வடிவமைப்பும், இதுவரை நடைமுறையில் இருந்த விகிதங்களும் முதலில் அறிமுகப்படுத்தப்படவே கூடாது. கடந்த எட்டு ஆண்டுகளாக நாங்கள் இந்த ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் விகிதங்களுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்தோம். ஆனால் எங்கள் வேண்டுகோள்கள் உங்கள் காதுகளுக்கு எட்டவில்லை." என்று கூறியுள்ளார்.
மேலும்,"இப்போது ஜிஎஸ்டி வரியில் மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசை தூண்டியது என்ன? மந்தமான பொருளாதார வளர்ச்சியா? வீட்டு கடன் அதிகரிப்பா? சேமிப்பு குறைவதா? பீகார் தேர்தலா? டிரம்ப் வரி விதிப்பா? அல்லது இவை அனைத்துமா?" என சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால், வரவிருக்கும் நாட்களில் ஜிஎஸ்டி மாற்றங்கள் மக்களின் வாழ்க்கையில் நேரடியாக எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேசமயம், அரசியல் தரப்பில் இந்த சீர்திருத்தம் குறித்து விமர்சனங்களும், வரவேற்பும் இணைந்த நிலையில் வெளியாகி உள்ளன.
English Summary
Is the Bihar election the reason for the GST tax change Is it Trump's tax imposition P Chidambaram questions