சீ...! விளையாட்டு விடுதியில் அரங்கேறிய கொடூரம்…! - 14 வயது மாணவன் மீது பாலியல் வன்கொடுமை!
horror that took place sports hall harassement 14 year old student
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில், விளையாட்டு பயிற்சி பெறும் மாணவர்களுக்காக ஒரு விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தங்கி, விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு, அருகிலுள்ள அரசு பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், அந்த விளையாட்டு விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவனை, அதே விடுதியில் தங்கியிருந்த பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர், 10-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்கள் என மொத்தம் 4 பேர், கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து, பல்வேறு வகைகளில் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், மாணவனை சிகரெட் புகைக்க கட்டாயப்படுத்தியும், கடுமையாக அச்சுறுத்தியும் அவர்கள் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கொடுமைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்ததால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த சிறுவன், இறுதியில் தனது பெற்றோரிடம் நடந்த அனைத்தையும் தெரிவித்தான்.
இதையடுத்து, மாணவனின் பெற்றோர், தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியலிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட 4 மாணவர்களும் உடனடியாக விடுதியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.தொடர்ந்து, குழந்தைகள் உதவி மைய அலுவலர் தியாகராஜன், இந்த சம்பவம் குறித்து தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில், காவல்துறையினர் 4 மாணவர்களையும் அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இந்த விசாரணையில், புகாரில் கூறப்பட்ட சம்பவங்கள் உண்மை என்பதும் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 4 மாணவர்கள்மீதும் போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, தஞ்சை சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
English Summary
horror that took place sports hall harassement 14 year old student