விவசாயிகளை மகிழ்வித்த அரசு...! ரூ.135 கோடியில் குறுவை சாகுபடி சிறப்புத் திட்டம்...! - முதலமைச்சர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!
government made farmers happy Special Kuruvai cultivation scheme worth 135 crore Important announcement made by Chief Minister Vijay
மேட்டூர் அணை திறப்பில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலை, மழைப்பொழிவு குறைவு மற்றும் நீர் பற்றாக்குறை போன்ற சவால்களுக்கு மத்தியில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"தமிழ்நாட்டின் வேளாண் பொருளாதாரத்தில் நெல் சாகுபடி முக்கிய இடத்தை வகிக்கிறது. குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகள் மாநிலத்தின் நெற்களஞ்சியமாக விளங்கி வருகின்றன. விவசாய உற்பத்தியை உயர்த்துவதோடு, உழவர்களின் வருமானத்தையும் அதிகரிக்கும் நோக்கில் 2026-ஆம் ஆண்டுக்கான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 52.72 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் நெல் உற்பத்தியின் முதுகெலும்பாக திகழ்கின்றன. இந்தப் பகுதிகளில் மட்டும் ஆண்டுக்கு 20.65 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்த அளவில் அமையாததுடன், ‘எல்நினோ’ தாக்கத்தால் மழைப்பொழிவு குறையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து, அணையின் நீர்மட்டமும் திருப்திகரமான அளவில் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.இந்த சூழலில், வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணையை உடனடியாக திறப்பதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனினும், வடிமுனைக் குழாய்க் கிணறுகள் உள்ளிட்ட மாற்று நீராதாரங்களை பயன்படுத்தி சாகுபடியை தொடர விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.77.50 கோடியும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார், குறுவை மற்றும் சொர்ணவாரி பருவ நெல் சாகுபடிக்காக ரூ.57.33 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இத்திட்டத்தின் கீழ் இயந்திர நடவு, நேரடி விதைப்பு, உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரக்கலவைகள், விதை மானியங்கள், புதிய நெல் ரகங்களுக்கான சான்று விதை உற்பத்தி ஊக்கத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்படவுள்ளன.மேலும், வேளாண் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளமுள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன.
நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அத்துடன், குறுவை பருவ சாகுபடிக்குத் தேவையான நெல் விதைகள் மற்றும் உரங்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாய பணிகள் தடையின்றி நடைபெற நாளொன்றுக்கு 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் சாகுபடி பரப்பு அதிகரிப்பதுடன், உற்பத்தித் திறன் உயர்ந்து, விவசாயிகளின் வருமானமும் மேம்படும். அதேசமயம் மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பும் மேலும் வலுப்பெறும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.எனவே, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் உதவிகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
government made farmers happy Special Kuruvai cultivation scheme worth 135 crore Important announcement made by Chief Minister Vijay