தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு - தமிழகம் முழுவதும் ஸ்டாலின் திட்டம் விரிவாக்கம்...!!
Free meals three times day sanitation workers Stalin scheme expanded across Tamil Nadu
சென்னையில் நகரை தூய்மையாக வைத்திருக்க தினமும் விடியற்காலையிலேயே உழைக்கும் தூய்மைப் பணியாளர்களுக்காக ‘இலவச உணவு திட்டம்’ மனிதநேய முயற்சியாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த நவம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைத்து, பணியாளர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய முன்னுதாரணத்தை உருவாக்கினார்.

இந்தத் திட்டத்தின் மூலம் சென்னை மாநகராட்சியில் ஷிப்ட் முறையில் பணிபுரியும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு தினமும் மூன்று வேளைகளிலும் சத்தான உணவு வழங்கப்படுகிறது.
காலை இட்லி, பொங்கல், கிச்சடி போன்ற சூடான உணவுகள், மதியம் சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் ஆகிய முழுமையான சாப்பாடு, இரவில் சப்பாத்தி அல்லது ரொட்டி உள்ளிட்ட இரவு உணவு என ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு உணவுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த மனிதநேயத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவதாக அறிவித்திருந்த முதலமைச்சர், அதன் தொடர்ச்சியாக இன்று திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள போலிவாக்கம் ஊராட்சி அத்திக்குளம் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் சென்னை உட்பட 25 மாநகராட்சிகள், 141 நகராட்சிகள், 479 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1,29,689 தூய்மைப் பணியாளர்கள் சுகாதாரமான, தரமான உணவை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பணியின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் வெப்பம் தாங்கும் சிறப்பு பைகளில் உணவு வழங்கப்பட்டதும் சிறப்பம்சமாகும்.விழா மேடையில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு கலன்களை வழங்கிய முதலமைச்சர், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி அவர்களை பாராட்டினார்.
அமைச்சர்கள், அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.நகரை சுத்தமாக வைத்திருப்பவர்களின் வாழ்வையும் சுத்தமாக, பாதுகாப்பாக மாற்றும் இந்த முயற்சி சமூக வட்டாரங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது.
English Summary
Free meals three times day sanitation workers Stalin scheme expanded across Tamil Nadu