தேர்வு முடிஞ்சாச்சு... அப்போ பணி நியமன ஆணை எங்கே...? - காவல்துறை காலிப்பணியிடங்கள் குறித்து வேல்முருகன் கொந்தளிப்பு....! - Seithipunal
Seithipunal


தமிழக காவல்துறையில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தேர்வுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த தகுதியான இளைஞர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படாதது ஏன்? என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,"தமிழ்நாட்டில் பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டிய காவல்துறையில் சுமார் 15 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. காவல்துறையில் மொத்தம் 1 லட்சத்து 34 ஆயிரத்து 667 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 1 லட்சத்து 18 ஆயிரத்து 851 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

ஒருபுறம் காவல்துறையில் பணியாளர் பற்றாக்குறை நீடிக்கிறது. மறுபுறம், பல்வேறு தேர்வுகளில் வெற்றி பெற்று பணி நியமன ஆணையை எதிர்பார்த்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கின்றனர். ஆட்கள் தேவை, தகுதியான இளைஞர்கள் தயார், பணியிடங்களும் காலியாக இருக்கின்றன. இத்தகைய சூழலிலும் ஆட்சேர்ப்பை மேற்கொள்ள அரசு தயக்கம் காட்டுவது ஏன்? என்று வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அறிவிக்கப்பட்ட 3,644 பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வுகள் நிறைவடைந்துவிட்டன. இதில் 2,833 இரண்டாம் நிலைக் காவலர்கள், 180 சிறைக் காவலர்கள், 631 தீயணைப்பாளர்கள் பணியிடங்கள் அடங்கும்.ஆனால், உயரம் அளவீடு தொடர்பான வழக்குகள் மற்றும் தமிழ்வழிக் கல்விக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகளை காரணம் காட்டி, உதவி ஆய்வாளர் உள்ளிட்ட அடுத்தகட்ட பணியமர்த்தல் நடவடிக்கைகள் காலவரையின்றி முடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை திறம்பட கையாண்டு, அவற்றுக்கு விரைந்து தீர்வு காண வேண்டியது அரசின் பொறுப்பு. வழக்குகள் முடிவடையும் வரை தேர்வர்களின் வயது காத்திருக்காது. அவர்களின் குடும்பச் சூழலும் பொருளாதார நெருக்கடியும் நீடித்துக்கொண்டே இருக்காது.காவல்துறையில் பணியாளர் பற்றாக்குறை காரணமாக ஏற்கனவே பணியில் உள்ள காவலர்கள் கூடுதல் பணிச்சுமையையும் மன அழுத்தத்தையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

ரோந்து பணி, பாதுகாப்பு பணி, குற்றப்புலனாய்வு, நீதிமன்றப் பணிகள் என பல்வேறு பொறுப்புகளை குறைந்த எண்ணிக்கையிலான காவலர்களே சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.ஓய்வுபெற உள்ள காவலர்களின் எண்ணிக்கையை முன்கூட்டியே கணக்கிட்டு, காலியிடங்கள் உருவாகும் முன்பே புதிய ஆட்சேர்ப்புக்கான பணிகளை தொடங்குவதுதான் தொலைநோக்கு நிர்வாகத்தின் அடையாளமாகும். ஆனால், தற்போதைய அரசின் அணுகுமுறை போதிய திட்டமிடல் இல்லாத நிர்வாகத்தையே வெளிப்படுத்துகிறது.

காவல்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் தாமதப்படுத்துவதற்கு யார் பொறுப்பு? தேர்ச்சி பெற்ற இளைஞர்களின் பணி நியமனத்தை தடுத்து நிறுத்தியுள்ள சட்டச் சிக்கல்களுக்கு அரசு காணப்போகும் தீர்வு என்ன? ஓய்வுபெறும் காவலர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு தொடர்ந்து ஆட்சேர்ப்பு நடத்துவதற்கான தொலைநோக்குத் திட்டம் அரசிடம் இல்லையா? எனவும் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவலர்களின் பணிச்சுமையை குறைத்து, குற்றத்தடுப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு பணிகளை மேலும் வலுப்படுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். காலதாமதத்துக்கான காரணங்களை கூறிக்கொண்டிருக்காமல், சட்டச் சிக்கல்களுக்கு விரைந்து தீர்வு கண்டு, தகுதி பெற்று காத்திருக்கும் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்க வேண்டும்.இளைஞர்களின் எதிர்காலத்தை தாமதப்படுத்துவதும், காவலர்களை தொடர்ந்து கூடுதல் பணிச்சுமையில் வைத்திருப்பதும் பொதுமக்களின் பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண்பதுடன், காவல்துறையில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்பி, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

exam is over so where appointment order Velmurugan agitation regarding police vacancies


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->