இதெல்லாம் சரிப்பட்டு வரத்து! நேரில் செல்லுங்கள்! தமிழக அரசுக்கு எடுத்துரைக்கும் டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


குறுவை பயிர்களைக் காக்க  வினாடிக்கு 5000 கன அடி  தண்ணீர் போதாது; ஒன்றாம் தேதி வரை காத்திருக்காமல் கூடுதல் நீர் கேட்டு உச்சநீதிமன்றத்தை தமிழகம் அணுக வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "புதுதில்லியில் நேற்று நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் கூட்டத்தில், தமிழ்நாட்டில் கருகும் நிலையில் உள்ள குறுவை பயிர்களைக் காப்பாற்ற வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு ஆணையிடப்பட்டிருக்கிறது.

காவிரி படுகையின் தண்ணீர் தேவைக்கு இது போதாது என்பது ஒருபுறமிருக்க, இந்த அளவு குறைவான நீரைக் கூட தமிழகத்திற்கு தர முடியாது என்று கர்நாடகம் மறுத்து விட்டது. கர்நாடகத்தின் பிடிவாதமும், காவிரி  ஒழுங்குமுறை குழு காட்டும் பாகுபாடும் கண்டிக்கத்தக்கவை ஆகும்.

குறுவைப் பயிர்களைக் காப்பாற்றுவதற்காக வினாடிக்கு 24,000 கன அடி வீதம் 10 நாட்களுக்கு, அதாவது மொத்தம் 20 டி.எம்.சி தண்ணீர் வழங்க ஆணையிடும்படி காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

தமிழ்நாடு தண்ணீர் திறந்து விடக்கோரும் செப்டம்பர் 8-ஆம் நாள் வரை, தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் 59.80 டி.எம்.சி தண்ணீரை வழங்க வேண்டியிருக்கிறது. அதில்  மூன்றில் ஒரு பங்கு நீரை மட்டும் தான் தமிழ்நாடு கோருகிறது. ஆனால்,  அதை ஏற்காத ஒழுங்குமுறை குழு  6.25 டி.எம்.சி நீரை மட்டுமே வழங்க ஆணையிட்டுள்ளது. இது தமிழகத்திற்கு தர வேண்டிய நீரில்  ஏறக்குறைய பத்தில் ஒரு பங்கு தான்.

ஒழுங்குமுறை குழு ஆணையிட்ட அளவுக்கு கூட தண்ணீரை திறக்க முன்வராத கர்நாடக அரசு, வினாடிக்கு 3000 கன அடி வீதம் 2.5 டி.எம்.சி தண்ணீரை மட்டுமே வழங்குவதாக கூறுகிறது.  

தமிழகத்திற்கு  திறந்து விட காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணையிட்ட நீரின் அளவும், கர்நாடகம் திறந்து விடுவதாக கூறிய தண்ணீரின் அளவும்  காவிரி பாசன மாவட்டங்களில்  கருகிக் கொண்டிருக்கும் குறுவை பயிர்களை காப்பாற்றுவதற்கு போதுமானது அல்ல.

காவிரி பாசன மாவட்ட உழவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும்  விஷயத்தில் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவும், கர்நாடக அரசும் கடைபிடித்து வரும் அணுகுமுறை இரக்கமற்றது.

மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 18 டி.எம்.சி நீர் மட்டுமே உள்ளது. குடிநீர் மற்றும் குறைந்தபட்ச தேவைகளுக்கான தண்ணீர் போக மீதமுள்ள தண்ணீரைக் கொண்டு  குறுவை பாசனத்திற்கு ஒரு வாரத்திற்கு கூட தண்ணீரை திறக்க முடியாது.

அவ்வாறு திறக்க முடியாவிட்டால் குறுவை பயிர்கள் கருகுவதை தடுக்க முடியாது. எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர்களைக் காப்பாற்ற அவசரமாகவும், அதிரடியாகவும் தமிழக அரசு எதையாவது செய்ய வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது.

தில்லியில்  இன்று நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின்  கூட்டத்தில், குறுவைப் பயிர்களைக் காப்பாற்றுவதற்காக வினாடிக்கு 24,000 கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர்  திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசின் பிரதிநிதிகள், காணொலி மூலமாக அல்லாமல் நேரில் சென்று வலியுறுத்த வேண்டும்.  

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழகத்திற்கு நீதி கிடைக்கவில்லை என்றால், குறுவை பயிர்களை காக்க வேண்டியதன் அவசரத்தைக் கருத்தில் கொண்டு, காவிரி வழக்கு  செப்டம்பர் ஒன்றாம் தேதி விசாரணைக்கு வரும் வரை காத்திருக்காமல், உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க ஆணையிடும்படி தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About Cauvery Water issue TNGovt 29082023


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->