93 வயது வீரத்தாய் சின்னப்பொண்ணு மறைந்தார்! மருத்துவர் ராமதாஸ் இரங்கல்!  - Seithipunal
Seithipunal


இடஒதுக்கீட்டு போராட்ட தியாகி கோலியனூர் கோவிந்தனின் வீரத்தாயார் சின்னப்பொண்ணு மறைவுக்கு மருத்துவர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "வன்னியர் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவடைந்த மாவீரன் கோலியனூர் கோவிந்தனின் 93 வயது தாயார் சின்னப்பொண்ணு முதுமை & உடல்நலக் குறைவு காரணமாக இன்று மாலை காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

வீரத்தாய் சின்னப்பொண்ணு அம்மையாரின் வீரமும், இனஉணர்வும், தியாக உணர்வும் இப்போதும் என் கண்முன் நிழலாடுகின்றன. வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நடத்தப்பட்ட தொடர் போராட்டங்களின் ஒருகட்டமாக 17.09.1987 முதல் வன்னியர் சங்கத்தின் சார்பில் ஒரு வார தொடர் சாலை மறியல் போராட்டம் தொடங்கப்பட்டது. போராட்டத்தின் முதல் நாளிலேயே கோலியனூரில் சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். மார்பில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில், சரிந்து விழுந்த கோலியனூர் கோவிந்தன், தாம் உயிர்ப்பிழைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை; மாறாக, போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருந்தான்.

அதனால் போராட்டத்தில் பங்கேற்றிருந்த மற்றவர்களைப் பார்த்து, "எங்க உயிரே போனாலும் சரி, எந்த வண்டியையும் ஓடவிடாதீங்க. அய்யா அறிவிக்கும் வரை எந்த வாகனங்களையும் ஓடவிடாதீங்க. வாழ்க டாக்டர் அய்யா" என்று முழக்கமிட்ட மாவீரன் தான் கோலியனூர் கோவிந்தன். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் காவல்துறையினர் துப்பாக்கிக் கட்டைகளால் மார்பில் தாக்கியும், பூட்ஸ் கால்களால் மிதித்தும் கோலியனூர் கோவிந்தனைக் கொன்றனர். இந்த செய்தியறிந்த போது கோவிந்தனின் தாயார் சின்னப்பொண்ணு சிறிதும் கலங்கவில்லை.

சமுதாயத்தின் நலனுக்காகத்தான் என் மகன் உயிர்த்தியாகம் செய்திருக்கிறான் என்று பெருமிதத்துடன் கூறினார். அப்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த நான், அடுத்த சில வாரங்களில் விடுதலையான பின், கோலியனூர் கோவிந்தனின் வீட்டிற்குச் சென்று அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறியபோதும், சின்னப்பொண்ணு அம்மையார் சிறிதும் கலங்காமல், துணிச்சலுடன் பேசினார்; இடஒதுக்கீடுப் போராட்டம் வெல்ல வாழ்த்தினார். 
அதன்பின், 34 ஆண்டுகள் ஆகிவிட்டன. அன்று முதல் இன்று வரை சின்னப்பொண்ணு அம்மையாரின் இனஉணர்வு சற்றும் குறையவில்லை. 

சமுதாயம் முன்னேற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். கடைசிவரை என்மீது அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார். அவரது மறைவு செய்தியை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பாட்டாளி சொந்தங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். கோலியனூரில் நாளை (13.02.2021) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச் சடங்கில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க. சார்பு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு அம்மையாருக்கு மரியாதை செலுத்துவார்கள்" என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr Ramadoss mourning to demise of Bold lady chinnaponnu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->