சென்னையில் கோர விபத்து: கண்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!
Devastating Collision in Madhavaram Family of Three Crushed Under Container Lorry Wheels
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாதவரம் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்து, ஒரு ஒட்டுமொத்த குடும்பத்தையே சிதைத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (42) என்பவர் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி பிரேமலதா மற்றும் இவர்களது 8 வயது மகன் இன்ப செல்வன் ஆகிய மூவரும் நேற்று மணலிக்குச் சென்றுவிட்டு, தங்களது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இன்ப செல்வன் அம்பத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குடும்பத்தினர் மாதவரம் ஆந்திர மாநிலப் பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திர அரசுப் பேருந்து ஒன்று வெளியே வந்துள்ளது. அப்போது அந்தப் பேருந்துக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர், பேருந்து வருவதைக் கண்டு பிரேக் பிடித்துள்ளார்.
ஆனால், எதிர்பாராத விதமாக லாரியில் பிரேக் பிடிக்காமல் போனதால், லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பேருந்தின் பின் பகுதியில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில், பேருந்துக்கும் லாரிக்கும் இடையில் சிக்கிய கார்த்திகேயனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியது. இதில் கார்த்திகேயன், பிரேமலதா மற்றும் சிறுவன் இன்ப செல்வன் ஆகிய மூவரும் கீழே விழுந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் பின்னால் வந்த கண்டெய்னர் லாரியின் ராட்சத சக்கரம் அவர்கள் மீது ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கிய மூவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்கப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புழல் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அன்பரசன் என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், குறிப்பாக 8 வயதுச் சிறுவன் விபத்தில் பலியானது அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Devastating Collision in Madhavaram Family of Three Crushed Under Container Lorry Wheels