சாட்சி சொன்னதற்கே உயிர் பறிப்பு...! - 8 பேருக்கு தண்டனை உறுதி; செல்வராஜுக்கு தூக்கு...!
Death testifying Sentence confirmed 8 people hanging Selvaraj
திருநெல்வேலி மாவட்டம் பாளையஞ்செட்டிகுளத்தில் 2016 ஆம் ஆண்டு தேர்தல் முன் ஏற்பட்ட விரோதம் பெருமாள் மீது கொலை முயற்சியாக வெடித்தது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக நின்றவர் அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலாளர் வைகுண்டம். வைகுண்டம், எதிர் தரப்பினராக இருந்த செல்வராஜ் குழுவுக்கு எதிராக நீதிமன்றத்தில் உண்மையைப் பதிவு செய்தார்.

இதனால் அவர்மீது அந்தக் குழுவினர் கடும் பகை மனப்பான்மையுடன் திருப்பி தாக்கு திட்டம் தீட்டியதாக கூறப்பட்டது.2022 மார்ச் 10-ஆம் தேதி, பாளையஞ்செட்டிகுளம் கால்வாயில் குளித்துக்கொண்டிருந்த வைகுண்டத்தை நோக்கி செல்வராஜ் (43), அந்தோணி ராஜ் @ பிரபாகரன் (46), அருள் பிலிப் (31), அன்டோ நல்லையா (28), பாபு அலெக்ஸாண்டர் (41), ராஜன் (70), லீலா (60), ஜாக்குலின் (59) என மொத்தம் எட்டு பேர் சென்றதாக வழக்கில் குறிப்பிடப்பட்டது.
வாய்த்தகராறு தீவிரமடைந்து, அந்த மோதலிலேயே வைகுண்டம் உயிரிழந்தார்.இதையடுத்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட 8 பேரையும் கைது செய்தனர். வழக்கு நெல்லை இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
நீதிபதி சுரேஷ்குமார் வழங்கிய தீர்ப்பில், செல்வராஜுக்கு தூக்கு தண்டனையும், அந்தோணி ராஜ், அருள் பிலிப், அன்டோ நல்லையா, பாபு அலெக்சாண்டர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. ராஜன், லீலா, ஜாக்குலின் ஆகியோருக்கு இரண்டு மாத சிறை, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி செல்வராஜ் மற்றும் நான்கு பேர் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். மனுக்கள் நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் விக்டோரியா கவுரி முன்பு விசாரிக்கப்பட்டன. அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, கூடுதல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகி, கீழமை நீதிமன்றத்தில் குற்றம் முழுமையாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக வலியுறுத்தினர்.
இரு தரப்பின் வாதங்களும் பரிசீலிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனைகள் அனைத்தும் அப்படியே உறுதிசெய்யப்பட்டதால், செல்வராஜின் தூக்கு தண்டனையும், மற்ற நான்கு பேரின் ஆயுள் தண்டனையும் நீடிக்கின்றன.
English Summary
Death testifying Sentence confirmed 8 people hanging Selvaraj