தமிழகத்தில் 'கோல்ட் ரிப்' இருமல் மருந்துக்கு தடை - காரணம் என்ன?
coldrif medicine ban in tamilnadu
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிந்த்வாரா மாவட்டத்தில் 1 முதல் 7 வயது வரை உள்ள 6 குழந்தைகள் கடந்த 15 நாட்களுக்குள் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 'கோல்ட் ரிப்' மருந்து மற்றும் வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட "நெக்ஸ்ட்ரோ டிஎஸ்" மருந்து ஆகிய இரு வேறு இருமல் மருந்துகளை அந்தக் குழந்தைகள் உட்கொண்டது கண்டறியப்பட்டது.

மேலும், அந்தக் குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைசால் எனப்படும் ரசாயன வேதிப்பொருள் இருந்தது தெரிய வந்தது. இந்த ரசாயனம், பெயிண்ட், மை போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படுவதாகவும், இது சம்பந்தப்பட்ட இருமல் மருந்துகளில் கலந்திருப்பதாகவும் சந்தேகிக்கப்பட்டது.
இதுதொடா்பாக பல் துறை விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மத்திய பிரதேச உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி தினேஷ் குமாா் மவுரியா, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளாா்.
அதில், "காஞ்சிபுரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மாவில் தயாரிக்கப்பட்ட 'கோல்ட்ரிஃப்' மருந்தை சோதனைக்கு உட்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளுமாறும், இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து, தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநா் எஸ்.குரு பாரதி தலைமையிலான குழுவினா், கடந்த இரு நாள்களாக சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனா். அங்கிருந்து 'கோல்ட் ரிப்' உள்பட 5 மருந்துகளை ஆய்வுக்காக எடுத்து வந்துள்ளனா்.
அதுமட்டுமல்லாமல் மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் அதன் விற்பனையையும், விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
English Summary
coldrif medicine ban in tamilnadu