மறு வாக்குப்பதிவு! நீதிமன்றத்தை நாட பாஜக முடிவு.!
BJP Demands Repolling
புகாருக்குள்ளான வாக்குச்சாவடி மையங்களில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், ஆளும் கட்சியான திமுகவே அதிக இடங்களில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தனித்து போட்டியிட்ட அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் சில இடங்களில் வெற்றி பெற்றன. சுயேச்சை வேட்பாளர்களும் ஒருசில இடங்களில் வெற்றி பெற்றனர்.
இன்று வெளியான தேர்தல் முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கடந்த 19-ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தலை திமுக நடத்திய விதம் வெட்கக்கேடானது என்றும், ஒட்டு மொத்த அளவில், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் வன்முறையை திமுக அரங்கேற்றி இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பாஜக சார்பில் முன் வைக்கப்படக் கூடிய அனைத்து புகார்களுடன் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்தார்.
வாக்குப்பதிவு மையங்களுக்கு, வெளியே நின்று கொண்டிருந்த திமுக -வினரை கண்டு மக்கள் பயத்துடன் இருந்ததாலேயே பெரும்பாலானோர் வாக்களிக்க வரவில்லை என்றும், இதனால் தான் வாக்கு சதவீதம் குறந்தது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
மேலும் மத்திய இணை அமைச்சர் முருகன் அவர்களின் வாக்கு கூட சிலரால் செலுத்தப்பட்டிருக்கிறது என்றும், நாங்கள் போராட்டம் நடத்திய பின்னரே அவர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார் என்றும் அவர் கூறினார்.