கூட்டுறவு பணியாளர்களுக்கு கூட்டுறவுத் துறையின் பெரிய ஆர்டர்! கூட்டுறவு சங்கங்களில் தங்க நகைக்கடன் முன்னுரிமை? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களில் நிர்வாகம் மற்றும் நிதி தொடர்பான முறைகேடுகளை தடுக்கும் வகையில், ஒரே கிளை அல்லது ஒரே பணியிடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களை கட்டாயமாக இடமாற்றம் செய்ய வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் மீண்டும் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு பொதுமக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 4,473 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும், 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும், 933 கிளைகளுடன் செயல்பட்டு வருகின்றன. இங்கு விவசாயிகளுக்கு பயிர் கடன், நகை கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்படுகின்றன. சுமார் 2,500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் நிலையில், பலர் ஒரே கிளையில், ஒரே பிரிவில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருவதாக புகார்கள் எழுந்தன.

குறிப்பாக, சில பணியாளர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு முன்னுரிமை அளித்து கடன் வழங்குதல், கடன் தொகைகளை தவறாக பதிவு செய்தல், சேமிப்பு தொகைகளை முறையற்ற வகையில் பயன்படுத்துதல், தவறான வட்டி கணக்கீடு, நிலுவை தொகைகளை பதிவு செய்யாமல் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்வது போன்ற முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்தன.

இதன் காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குநர்களுக்கு, ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என பதிவாளர் நந்தகுமார் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின் படி, பணியாளர்கள் எந்த தேதியில் இருந்து எந்த கிளையில் பணியாற்றுகிறார்கள் என்ற முழுமையான பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், பல மண்டல இணை பதிவாளர்கள் இந்த உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை. இதையடுத்து, தற்போது மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ள பதிவாளர் நந்தகுமார், இடமாற்ற நடவடிக்கைகள் மேற்கொண்ட விவரங்களுடன் கூடிய நிறைவு அறிக்கையை வரும் 29ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனக் கடுமையாக எச்சரித்துள்ளார். அவ்வாறு அறிக்கை அனுப்பப்படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை மூலம் கூட்டுறவு சங்கங்களில் நிர்வாக வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்றும், ஒரே இடத்தில் நீண்ட காலம் பணியாற்றுவதால் உருவாகும் தனிப்பட்ட தொடர்புகள், உள்ளூர் அழுத்தங்கள், கணக்கு மறைப்புகள் போன்றவை குறையும் என்றும் பொதுமக்கள் கருதுகின்றனர். மேலும், புதிய பணியாளர்கள் பொறுப்பேற்கும் போது பழைய கணக்குகள் மீண்டும் பரிசீலிக்கப்படுவதால், மறைந்திருந்த பிழைகள் வெளிவரும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

இதனால் கூட்டுறவு சங்கங்கள் நேர்மையாக செயல்படுகின்றன என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உருவாகும் என்றும், சேமிப்பு, கடன் மற்றும் அரசு திட்டங்களை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்குவார்கள் என்றும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Big order from the cooperative sector for cooperative employees Gold and jewelry loans priority in cooperative societies


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->